ரீசார்ஜ் கட்டணங்களில் சலுகை! வேலிடிட்டி கெடு நீட்டிப்பு!

31 March 2020 தொழில்நுட்பம்
telecomoperators.jpg

ரீசார்ஜ் செய்வதற்கான கால அவகாசத்தினை, இந்தியத் தொலைத் தொடர்பு நிறுவனங்கள் நீட்டித்துள்ளன. மேலும், பல சலுகைகளையும் அறிவித்து உள்ளன.

இந்தியாவில் 21 நாட்கள் ஊரடங்கு அமலில் உள்ள நிலையில், தொலைத்தொடர்பு சேவையானது, கேள்விக்குறியாகி உள்ளது. ஏப்ரல் 14 வரை, பெரும்பாலான ரீசார்ஜ் கடைகள், ஷோ ரூம்கள் மூடப்பட்டு உள்ளன. இதனால், பொதுமக்களால் தங்களுடைய மொபைலுக்கு ரீசார்ஜ் செய்ய இயலவில்லை. அனைவருக்கும் இணையத்தினைப் பயன்படுத்தி, ரீசார்ஜ் செய்யத் தெரியாது.

28 நாட்களுக்குள் ரீசார்ஜ் செய்யாவிட்டால், இன்கமிங் மற்றும் அவுட்கோயிங் உள்ளிட்ட வசதிகளை, தொலைத்தொடர்பு நிறுவனங்கள் துண்டித்து வருகின்றன. தற்பொழுது நிலவும் சூழ்நிலையில், பலரும் தங்களுடையத் தொலைத்தொடர்பு சேவையினை இழக்கும் வாய்ப்புகள் உள்ளன. இதனைத் தடுக்கும் பொருட்டு, இந்தியத் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் தங்களுடைய அதிரடி சலுகைகளை அறிவித்துள்ளன.

இந்தியாவின் முன்னணித் தொலைத்தொடர்பு நிறுவனமான ஏர்டெல் நிறுவனம், தன்னுடைய வாடிக்கையாளர்கள் எட்டு கோடிப் பேர் இதனால் பாதிக்கப்படுவார்கள் எனக் கணித்துள்ளது. இதனைத் தடுக்கும் பொருட்டு, வேலிடிட்டி முடிந்த பின், ஏப்ரல் 17 வரை, இன்கமிங் கால்கள் வர அனுமதித்துள்ளது. மேலும், ஒவ்வொரு வாடிக்கையாளருக்கும், 10 ரூபாய் டாப் அப்பினை வழங்கியுள்ளது.

அதே போல் பிஎஸ்என்எல் நிறுவனம், ஏப்ரல் 20ம் தேதி வரை இந்த சலுகையை அறிவித்துள்ளது. தன்னுடைய வாடிக்கையாளர்களுக்கு 10 ரூபாய் டாப் அப்பும், ரீசார்ஜ் வேலிடிட்டி முடிந்து துண்டிக்கப்பட வேண்டிய எண்களுக்கு, இன்கமிங் கால்களுக்கு அனுமதியும் அளித்துள்ளது. அதே போல் இந்தியத் தொலைத் தொடர்பு ஒழுங்கு அமைப்பான டிராய் நிறுவனத்தின் அறிவுறுத்தலின்படி, அனைத்து ப்ரிப்பெய்டு வாடிக்கையாளர்களுக்கும், தொலைத் தொடர்பு நிறுவனங்கள் ரீசார்ஜ் வேலிடிட்டியினை நீட்டிக்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளது.

அதனால், இந்த நிறுவனங்கள் தங்களுடைய வாடிக்கையாளர்களுக்கு இந்த சலுகையினை அறிவித்துள்ளன. ஜியோ, வோடாபோன், ஐடியா உள்ளிட்ட நிறுவனங்களும், தங்களுடைய வாடிக்கையாளர்களுக்கு இந்த சலுகையினை அறிவித்துள்ளன.

HOT NEWS