ஜனவரி 27ம் தேதி வெளியே வருகின்றார் சசிகலா! அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது!

14 September 2020 அரசியல்
sasikala.jpg

வருகின்ற 2021ம் ஆண்டு ஜனவரி மாதம் 27ம் தேதி அன்று, சசிகலா சிறையில் இருந்து விடுதலையாவதாக அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகி உள்ளன.

அளவுக்கதிகமான சொத்துக் குவித்த வழக்கில், குற்றம் சாட்டப்பட்ட சசிகலா பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டார். அவருடைய சகோதரர் மற்றும் உறவினர் ஒருவரும் சிறையில் அடைக்கப்பட்டனர். இந்த சூழ்நிலையில், அவர் இந்த ஆண்டு சிறையில் இருந்து வெளியில் வந்து விடுவார் என, அரசியல் வட்டாரங்கள் கிசுகிசுத்தன. இந்த சூழ்நிலையில், இது குறித்து கருத்துத் தெரிவித்து வந்த அதிமுகவினர், அதிமுகவில் சசிகலாவிற்கு இடம் இல்லை என்றுக் கூறி வந்தனர்.

இதனிடையே, இன்று பெங்களூரூ பரப்பன அக்ரஹார சிறையின் சூப்ரண்டன்ட் கையொப்பமிட்ட கடிதம் ஒன்று வெளியாகி உள்ளது. அதில், கைதி எண் 9234 சசிகலா வருகின்ற 2021 ஜனவரி 27ம் தேதி அன்று வெளியாவார் எனவும், ஒருவேளை தான் கட்ட வேண்டிய 10 கோடி ரூபாய் அபராதத்தினை கட்டவில்லை என்றால், 2022ம் ஆண்டு ஜனவரி மாதம் 27ம் தேதி விடுதலை ஆவார் எனவும் கூறப்பட்டு உள்ளது.

கடந்த 2017ம் ஆண்டு சொத்துக் குவிப்பு வழக்கில் சிறை சென்ற சசிகலா, தன்னுடைய கணவர் நடராஜனின் மறைவிற்கு மட்டுமே பரோலில் வெளியில் வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் விடுதலை ஆகும் தேதி அறிவிக்கப்பட்டு உள்ளதால், அதிமுக வட்டாரத்தில் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.

HOT NEWS