நான்கு நாடுகள் இணைந்த கடற்படை பயிற்சி தொடங்கியது! சீனா விரக்தி!

04 November 2020 அரசியல்
us-navy-ship.jpg

இந்தியா, ஆஸ்திரேலியா, ஜப்பான், அமெரிக்கா ஆகிய நாடுகள் இணைந்து நடைபெறும் கடற்படை பயிற்சியானது தற்பொழுது துவங்கி உள்ளது.

இந்தியாவிற்கும் சீனாவிற்கும் இடையில், தற்பொழுது லடாக் மற்றும் லே பகுதியில் மோதல் தொடர்ந்து நீடித்து வருகின்றது. இதனையொட்டி, சர்வதேச நாடுகளின் நட்பினையும், ஆதரவினையும் இந்திய அரசு நாடியுள்ளது. சீனாவின் கொட்டத்தினை அடக்கவும், தன்னுடைய வலிமையினைப் பெருக்கும் பொருட்டும் இந்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபட்டு உள்ளது. அதனடிப்படையில், சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு அதிகளவில் வரி விதிக்கப்படுகின்றது.

அதே போல், அதற்கு இராணுவ அளவில் வலிமையினை நிரூபிக்கும் பொருட்டு, வங்கக் கடற்பகுதியில் கடந்த வாரம் போர் பயிற்சி நடைபெற்றது. இந்த சூழ்நிலையில், இந்தியாவுடன் இணைந்து, அமெரிக்கா, ஜப்பான், ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகள் கடற்படை பயிற்சியில் ஈடுபட முன் வந்தன. அதனைத் தொடர்ந்து, தற்பொழுது நேற்று (03-11-2020) இந்த பயிற்சியானது துவங்கியது. இதற்கு குவாட் என்ற அமைப்பினையும் இந்த நாடுகள் உருவாக்கி உள்ளன. இந்தோ-பசிபிக் கடற்பகுதியில் பாதுகாப்பினை அதிகரிக்கவும், பாதுகாப்பினை பலப்படுத்தும் பொருட்டும் இந்த அமைப்பு உருவாக்கப்பட்டு உள்ளது.

மலபார் கடற்பயிற்சி ஒத்திகை என, இந்த ஆண்டிற்கான பயிற்சியானது பெயரிடப்பட்டு உள்ளது. இது குறித்து, இந்திய கடற்படைத் தரப்பில் கூறுகையில், இது ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் வழக்கமான கடற்படைப் பயிற்சி எனவும், இந்தாண்டும் வழக்கம் போல நடைபெறுகின்றது எனவும் கூறியுள்ளது. இந்தப் பயிற்சியானது வங்காள விரிகுடாவில் உள்ள மலாக்கா நீரிணைப் பகுதியிலும், அரபிக் கடலிலும் நடைபெற்று வருகின்றது.

இந்தப் பயிற்சியில் இந்தியாவின் சார்பில் நீர்மூழ்கிக் கப்பல் உட்பட 5 கப்பல்கள் பங்கேற்றன. அமெரிக்காவின் ஏவுகணை அழிக்கும் கப்பல், ஆஸ்திரேலியாவின் பல்ரட் பிரிகேட் கப்பல் மற்றும் ஜப்பானின் பிரம்மாண்டமான போர்கப்பல் ஆகியவை பயிற்சியில் ஈடுபட்டு உள்ளன. 2 கட்டங்களாக நடைபெறும் இந்தப் பயிற்சியில், 2வது கட்டப் பயிற்சியானது நவம்பர் 17ம் தேதி துவங்கி, 20ம் தேதி வரை நடைபெற உள்ளது.

HOT NEWS