ரஷ்யாவுடன் இணைந்து ஏகே47 துப்பாக்கிகளைத் தயாரிக்க இந்தியா திட்டம்!

04 September 2020 அரசியல்
rajnathsinghak47.jpg

சீனாவுடன் இந்தியாவிற்கு பிரச்சனை நிலவி வருகின்ற நிலையில், அவசரப் பயணமாக பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், ரஷ்யா சென்றுள்ளார்.

இந்தியாவிற்கும் சீனாவிற்கும் இடையில், கடந்த ஜூன் 15ம் தேதி அன்று லடாக் பகுதியில் நடைபெற்ற மோதலில், 20 இந்திய வீரர்கள் உயிரிழந்தனர். இதனால், இந்தியாவிற்கும் சீனாவிற்கும் இடையில் போர் மூளும் அபாயம் உருவானது. இருப்பினும், இரு நாட்டு இராணுவ உயரதிகாரிகளும் தொடர்ந்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இதில், எவ்வித முடிவும் எட்டப்படவில்லை.

இந்த சூழலில், கடந்த சில நாட்களாக சீன இராணுவம், இந்திய எல்லைப் பகுதிகளில் அத்துமீறி வருகின்றது. அதன் காரணமாக, இந்திய இராணுவம் அப்பகுதிகளில் குவிக்கப்பட்டு வருகின்றது. இந்தியாவின் ரபேல் உள்ளிட்டப் பல போர் விமானங்களும், அப்பகுதியில் குவிக்கப்பட்டு உள்ளனர். அதுமட்டுமின்றி, இந்தியாவின் இராணுவத் துருப்புக்கள் பலவும் அப்பகுதியில் நிலை நிறுத்தப்பட்டு வருகின்றன. இந்த சூழ்நிலையில், இந்தியாவின் பாதுகாப்புத்துறை அமைச்சராக இருக்கும் ராஜ்நாத் சிங், அவசர அவசரமாக ரஷ்யாவிற்குச் சென்றுள்ளார்.

அங்குள்ள இராணுவ உயரதிகாரிகளைத் தொடர்பு கொண்டு, நேற்று ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்றார். அந்தக் கூட்டத்தில், இந்தியாவிற்குத் தேவையான ஏகே 47 203 துப்பாக்கிகளை வாங்குவதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார். இதில் மொத்தம் ஏழரை லட்சம் துப்பாக்கிகள் தேவைப்படுவதாகவும், அதில் ஒரு லட்சம் துப்பாக்கிகளை ரஷ்யாவிடம் இருந்து இறக்குமதி செய்யவும், மீதியினை உத்திரப்பிரதேசத்தில் உள்ள, ஆயுத உற்பத்தித் தொழிற்சாலையில் தயாரிக்கும் திட்டமிட்டு உள்ளனர்.

HOT NEWS