சச்சின் டெண்டுல்கர் பிறந்தநாள்! ரசிகர்கள் கொண்டாட்டம்!

24 April 2020 விளையாட்டு
happybirthdaysachin.jpg

இன்று கிரிக்கெட்டின் கடவுளாகக் கருதப்படும் சச்சின் டெண்டுல்கரின் பிறந்தநாளினை, அவருடைய ரசிகர்கள் கோலாகலமாக கொண்டாடி வருகின்றனர்.

ஏப்ரல் 24, 1973ம் ஆண்டு மும்பை மாநகரில் பிறந்தார். அவர் தன்னுடைய குழந்தைப் பருவத்தில் இருந்தே, கிரிக்கெட் மீது மோகம் கொண்டவராக இருந்தார். அவருடைய கோச்சான அச்ரேக்கர் தான், அவருடைய வழிகாட்டி சில மாதங்களுக்கு முன்னர் தான், அவர் மரணமடைந்தார். அவருடைய வழிகாட்டுதலில் தான், தற்பொழுது நம்மால் மாஸ்டர் பிளாஸ்டரைக் காண முடிகின்றது.

தன்னுடைய ஆட்டக் காலத்தில், தன்னை விட ஒரு சிறந்த வீரன் கிரிக்கெட் உலகில் இல்லை என நிரூபித்தவர் சச்சின். பொறுமையான பேட்டிங், அமைதியான முகம். ஆனால், அடி ஒவ்வொன்றும் இடி போல இறக்கும். அவர் பேட்டில், படும் பந்துகள் அனைத்தும் மின்னல் வேகத்தில் பறக்கும். டெஸ்ட், ஒரு நாள் போட்டிகள், டி20 போட்டிகள், ஐபிஎல் போட்டிகள் என அனைத்து வகைக் கிரிக்கெட் போட்டிகளிலும் முத்திரைப் பதித்தவர்.

இவரை லிட்டில் மாஸ்டர், மாஸ்டர் பிளாஸ்டர் என அனைவரும் புகழ்வர். அந்த அளவிற்கு, மிக நுணுக்கமான விளையாட்டினை வெளிப்படுத்துவதில் வல்லவர். இவர் காலை மடக்கி, மண்டியிட்டு அடிக்கும் சிக்சருக்கு நிகர், வேறு எந்த கிரிக்கெட் ஷாட்டும் இல்லை. அவ்வளவு நேர்த்தியாக இருக்கும். 1989ம் ஆண்டு நவம்பர் 15ம் தேதி அன்று, முதன் முதலாக பாகிஸ்தான் அணிக்கு எதிராக அவர் கிரிக்கெட் விளையாட ஆரம்பித்தார்.

சுமார் 22 ஆண்டுகளுக்கும் மேலாக, கிரிக்கெட் உலகின் முடிசூடா மன்னனாக இருந்து வந்த சச்சின், நவம்பர் 14 2013ம் ஆண்டு அனைத்து வகைக் கிரிக்கெட் போட்டிகளிலும் இருந்து விடைபெற்றார். 200 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள அவர், 15,921 ரன்களைக் குவித்துள்ளார். இதில், 51 சதம், 68 அரை சதம், அதிகபட்சமாக 248 ரன்கள், எடுத்து அசத்தியுள்ளார்.

அதே போல், 46 விக்கெட்டுகளையும் வீழ்த்தியிருக்கின்றார் என்பது குறிப்பிடத்தக்கது. அதே போல், 463 ஒரு நாள் கிரிக்கெட் போட்டிகளில் அவர் விளையாடி இருக்கின்றார். அதில், 18,426 ரன்கள் குவித்து, உலகின் அதிக ரன்கள் குவித்த வீரர் என்றப் பெயரைப் பெற்றார். 49 சதம், 96 அரை சதம், அதிகபட்சமாக 200 ரன்கள் என, இவரின் சாதனைப் பட்டியல் நீண்டு கொண்டே இருக்கும்.

தன்னுடைய வாழ்நாளில் 8,000 பந்துகளை ஒரு நாள் போட்டிகளில் வீசிய அவர், 154 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். இவ்வளவு சாதனைகளை செய்த பின்னரும், எப்படி முதல் போட்டியில், ஆடுகளத்திற்குள் மிக அடக்கமாக நுழைந்தாரோ, அதே அடக்கம் தான் கடைசி ஆட்டத்திலும் காண முடிந்தது. இவருடைய பிறந்தநாளான இன்று, அவருடைய ரசிகர்கள் சமூக வலைதளத்தின் தன்னுடையக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர் என்றால், அது மிகையாகாது.

HOT NEWS