ஜியோவிற்கு செல்லும் பிஎஸ்என்எல் செல்போன் டவர்கள்! காலியாக்கப்படும் பொதுத்துறை நிறுவனங்கள்!

22 December 2020 தொழில்நுட்பம்
tower.jpg

ரிலையன்ஸ் ஜியோ நிறுவனமானது, தற்பொழு பிஎஸ்என்எல் நிறுவனத்தின் செல்போன் டவர்களை பயன்படுத்த ஒப்பந்தம் செய்துள்ளது.

இந்தியாவின் 2வது பெரிய தொலைத்தொடர்பு நிறுவனமாக மாறியுள்ள ஜியோ நிறுவனம், தற்பொழுது தன்னுடைய சேவையினை அனைத்து கிராமப்புற பகுதிகளுக்கும் எடுத்துச் செல்ல முயற்சித்து வருகின்றது. அதன் ஒரு பகுதியாக, கிராமப்புறப் பகுதிகளில் செல்போன் டவர்களை அமைத்தும், வாடகைக்கு எடுத்தும் பயன்படுத்தி வருகின்றது.

அனைத்துப் பகுதிகளிலும் புதிய டவர்களை அமைப்பதில் சிரமம் இருந்து வருகின்றது. இதனால், ஏர்டெல், ரிலையன்ஸ் கம்யூனிக்கேஸன்ஸ், வியோம் நெட்வொர்க், அமெரிக்கன் டவர் கம்பெனி, அஸ்ஸெண்ட் டெலிகாம் இன்ப்ராஸ்ட்ரக்சர் ஆகிய நிறுவனங்களின் டவர்களை பயன்படுத்திக் கொள்ள, ஒப்பந்தம் செய்துள்ளது. அதனைப் பயன்படுத்தி, தன்னுடைய வாடிக்கையாளர்களுக்கு தங்களுடைய சேவையினை வழங்கி வருகின்றது.

இருப்பினும், கிராமங்களில் ஜியோ சிம்மிற்கு சரியாக டவர் கிடைப்பதில்லை என்றப் புகாரானது தொடர்ந்து, நீடித்து வருகின்றது. இதனை சரிகட்டும் விதமாக, இந்தியா முழுவதும் டவர் வைத்துள்ள பிஎஸ்என்எல் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்துள்ளது. அதன்படி, அந்த நிறுவனத்தின் 4,000 மொபைல் டவர்களை வாடகைக்குப் பயன்படுத்த உள்ளது ஜியோ நிறுவனம். இந்த டவர்களில் கிரவுண்ட் பேஸ்டு டவர்களுக்கு மாதம் 38,000 மற்றும் ரூப்டாப் பேஸ்டு டவர்களுக்கு மாதம் 24,900 ரூபாயினை வாடகையாக கொடுக்கவும் முன் வந்துள்ளது.

இந்த ஒப்பந்தத்திற்கு பிஎஸ்என்எல் நிறுவனமும், புதிய சலுகைகளை வழங்க முடிவு செய்துள்ளது. ஒரு வருடத்திற்கு 1,500 டவர்களை மட்டும் பயன்படுத்தினால், கிரவுண்ட் பேஸ்ட் டவர்களுக்கு மாதம் 35,000 மற்றும் ரூப்டாப் டவர்களுக்கு 21,000 செலுத்தினால் போதும் எனக் கூறியுள்ளது. அதே போல், 1000 டவர்களுக்கு குறைவாகப் பயன்படுத்தும் பட்சத்தில், மேலும் 5% தள்ளுபடி வழங்குவதாகவும் பிஎஸ்என்எல் தெரிவித்து உள்ளது. ஆனால், ஜியோ நிறுவனமோ 4,000 டவர்களை பயன்படுத்துவதற்கு ஒப்பந்தம் செய்து முடித்து விட்டது.

HOT NEWS