34,000 பேர் பலி! ஒன்றரை லட்சம் பேர் மீண்டுள்ளனர்! 1000 பேர் ஒரே நாளில் மீண்டனர்!

30 March 2020 அரசியல்
coronaquarantine1.jpg

உலகம் முழுக்க, கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கையானது, இன்று (30-03-2020) காலை 10.30 நிலவரப்படி, 7,22,435 ஆக உள்ளது. இதில், 1,51,991 பேர் பாதிப்பில் இருந்து மீண்டுள்ளனர். இந்நிலையில், இத்தாலியில் நேற்று ஒரே நாளில், 1000 பேர் இந்த நோய் பாதிப்பிலிருந்து மீண்டுள்ளனர்.

கடந்த ஆண்டு டிசம்பர் மாதம், சீனாவில் இருந்து பரவ ஆரம்பித்த கொரோனா வைரஸானது, மூன்று மாதங்களுக்குள் உலகம் முழுக்கப் பரவி உள்ளது. இதனால், பல நாடுகள் தங்களுடைய எல்லைகளை மூடியுள்ளன. ஊரடங்கு உத்தரவு, போக்குவரத்துத் தடை உள்ளிட்டப் பலவிதக் கட்டுப்பாடுகளை விதித்து வருகின்றன. இந்நிலையில், இந்தப் பாதிப்பிற்கு முதல் ஆதாரமாக இருக்கும் சீனாவில், இதன் வீரியம் முற்றிலும் குறைந்துள்ளது.

கொரோனா வைரஸ் தோன்றிய ஊஹான் மாகாணத்தில், புதிய நோய் தொற்று உள்ளவர்கள் என யாரும் பதிவாகவில்லை. அதே சமயம், இறப்பவர்களின் எண்ணிக்கையும் ஒற்றை இலக்கத்திற்கு குறைந்துள்ளது. இதனால், அங்கு அதிவேக இரயில்கள் மீண்டும் இயங்க ஆரம்பித்துள்ளன. ஆனால், இத்தாலியில், இந்த வைரஸின் தாண்டவமே வேறு நிலையில் உள்ளது.

இந்த வைரஸால் இத்தாலியில் மட்டும் சுமார் 97,689 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதில் 13,030 பேர் நோய் பாதிப்பில் இருந்து மீண்டுள்ளனர். 10,779 பேர் மரணமடைந்து உள்ளனர். இத்தாலியினைத் தொடர்ந்து ஸ்பெயின் நாட்டில் 80,100 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

அவர்களில், 14,709 பேர் பாதிப்பில் இருந்து மீண்டுள்ளனர். 6,803 பேர் மரணமடைந்துள்ளனர். சீனாவில் 81,470 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். அவர்களில், 75,770 பேர் மீண்டுள்ளனர். 3,304 பேர் மட்டுமே மரணமடைந்து உள்ளனர்.

இந்த நாடுகள் அனைத்தையும் மிஞ்சும் விதமாக, உலக வல்லரசு எனத் தன்னைத் தானே போற்றிக் கொள்ளும் அமெரிக்கா உள்ளது. அந்த நாட்டில், அதிவிரைவாக இந்த தொற்றானது விஸ்வரூபம் எடுத்துள்ளது. அந்த நாட்டில், 1,42,537 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். அவர்களில், 4,767 பேர் மட்டுமே மீண்டுள்ளனர். 2,510 பேர் இந்தப் பாதிப்பின் காரணமாக மரணமடைந்துள்ளனர்.

இந்தியாவினைப் பொறுத்தமட்டில், 1024 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். அவர்களில், 27 பேர் மரணமடைந்து உள்ளனர். 96 பேர் குணமாகி வீடு திரும்பியுள்ளனர். உலகளவில் இந்த வைரஸால், 7,22,435 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். அவர்களில், 1,51,991 பேர் மீண்டுள்ளனர். 33,997 பேர் இந்த வைரஸால் மரணமடைந்துள்ளனர்.

HOT NEWS