எஸ் ஐ வில்சன் கொலை வழக்கு! இரண்டு தீவிரவாதிகள் கைது!

16 January 2020 அரசியல்
siwilsoncase.jpg

கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளைப் பகுதியில், 57 வயதுடைய எஸ் ஐ வில்சன் கொலை வழக்கில் தேடப்பட்ட, இரண்டு முக்கியத் தீவிரவாதிகள் தற்பொழுது கைது செய்யப்பட்டுள்ளனர்.

கடந்த 8ம் தேதி அன்று, களியக்காவிளைப் பகுதியில் உள்ள சோதனைச் சாவடியில், சிறப்பு எஸ் ஐ வில்சன் பணியில் ஈடுபட்டு இருந்தார். அப்பொழுது, அங்கு வந்த இரண்டு மர்ம நபர்கள் கையில் வைத்திருந்த துப்பாக்கி மற்றும் கத்தியால் சராமாரியாகத் தாக்கியும், சுட்டும் உள்ளனர். இதனால், இரத்த வெள்ளத்தில் வில்சன் கிடந்துள்ளார். பின்னர், அங்கிருந்து இருவரும் தப்பிச் சென்றுள்ளனர். படுகாயம் அடைந்த வில்சனை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும் முன்பே, அவர் மரணமடைந்துவிட்டார்.

இந்த சம்பவம், கேரளா-தமிழ்நாடு எல்லைப் பகுதியில் நடைபெற்றதால், இரு மாநிலப் போலீசும் குவிந்தனர். தமிழகம் சார்பில் 10 தனிப்படைகளும், கேரளா சார்பில் நான்கு தனிப்படைகளும் அமைத்து, போலீசார் தேடுதல் பணியில் ஈடுபட்டனர். இந்நிலையில், தாக்குதல் சம்பவம் நடைபெற்ற சோதனைச் சாவடிக்கு அருகில் இருந்த மசூதியில் கண்காணிப்புக் கேமிரா இருந்துள்ளது. அதில் பதிவான, வீடியோவினை வைத்து போலீசார் ஷமீம் மற்றும் தவுபிக் என்ற இரு நபர்களை போலீசார் அடையாளம் கண்டறிந்தனர். இருப்பினும், அந்த இரு நபர்களைப் பற்றியத் தகவல்களும், அவர்கள் எங்கே சென்றனர் என்ற விவரம் இல்லாததால், அவர்களுடைய நண்பர்களைப் பிடித்துப் போலீசார் விசாரித்து வந்தனர்.

இந்த இரண்டு பேரினைப் பற்றியத் தகவலை கொடுத்தால், சுமார் 7 லட்ச ரூபாய் பரிசு வழங்கப்படும் என்ற அறிவிப்பினையும், தமிழக காவல்துறை வெளியிட்டது. இதனிடையே, வட மாநிலத்திற்கு தப்ப முயன்றதாக அந்த இரண்டு பேரையும், உடுப்பீ பகுதியில் உள்ள, இந்திராலி இரயில் நிலையத்தில் வைத்து தமிழ்நாடு-கேரளா போலீசார், சுற்றி வளைத்து கைது செய்தனர். அவர்கள் இருவருக்கும், துப்பாக்கி கொடுத்ததாக மெகபூப் பாஷா என்பவரை, கர்நாடகாவில் கைது செய்தனர்.

விரைவில், கைது செய்யப்பட்ட தவுபிக் மற்றும் ஷமிம் ஆகியோர் தமிழகம் கொண்டு வரப்பட்டு விசாரிக்கப்பட உள்ளனர். இருவருமே, உடுப்பீ வழியாக, வட இந்தியாவிற்கு தப்பிக்க முயற்சித்துள்ளதை, மெகபூப் பாஷா போலீஸ் விசாரணையில் கூறியிருக்கின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

HOT NEWS