தூர்தர்ஷனுக்கு ரஜினிகாந்த் பிரத்யேகப் பேட்டி!

22 November 2019 சினிமா
rajinikanthdoordarshan.jpg

கடந்த சில நாட்களாக, இல்லை இல்லை வாரங்களாக, மீடியா அனைத்துமே ரஜினியின் பின் தான் சுற்றுகின்றன என்றால் அது மிகையாகாது. அவரும், தொடர்ந்து, கலை நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளுதல், மீடியாக்களுக்குப் பேட்டியளித்தல், செய்தியாளர்களை சந்தித்தல் என மீடியா முன் தான் இருக்கின்றார்.

இந்நிலையில், நேற்று மாலை இந்திய அரசுக்குச் சொந்தமான தூர்தர்ஷன் சேனலுக்கு, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பிரத்யேகமாக பேட்டியளித்தார். நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கிய நெறியாளரின் கேள்விக்குப் பதிலளித்த சூப்பர் ஸ்டார், தமிழ் மக்களுக்கே தான் வாங்கிய விருது சமர்ப்பணம் என்றார்.

உங்களுக்கு விருது அறிவிக்கப்பட்டதும், நீங்கள் என்ன செய்தீர்கள் என நெறியாளர் கேள்வி எழுப்பினார். அதற்குப் பதிலளித்த சூப்பர் ஸ்டார், நான் முதலில் ஷாக் ஆயிட்டேன். பின்னர், பொறுமையாக அந்த விருதினை ஏற்றுக் கொண்டேன். விருது வழங்கிய பாரத அரசிற்கு நன்றி என்று கூறினார்.

நீங்கள் மிகவும் எளிமையானவர், பழக எளிதானவர் என உங்கள் ரசிகர்கள் கூறுகின்றனர் அது பற்றிய உங்கள் கருத்து என்ன என்று கேட்டார். அதற்குப் பதிலளித்த ரஜினி, நான் இயற்கையாகவே இப்படித் தான். நான் நானகவே இருக்கின்றேன். இப்படித் தான் என் குடும்பத்தாருடனும் இருப்பேன் என்றார்.

தற்பொழுதுள்ள நிலையில் இருந்து கொண்டு பார்க்கும் பொழுது, உங்களுடைய தொடக்க நிலையைப் பற்றி என்ன நினைக்கின்றீர்கள் எனக் கேள்வி கேட்டார் நெறியாளர். அதற்கு, முதலில் கடவுளுக்கும், பெற்றோர்களுக்கும் நன்றிகள். உடன்பணிபுரிந்த சினிமாத்துறையினர், என்னுடைய ரசிகர்கள் அனைவருக்கும் நன்றிகள். என்னுடைய ரசிகர்கள் என்னுடைய ஆரம்ப காலத்தில் இருந்து, தற்பொழுது வரை என்னை நேசிக்கின்றனர்.

உங்கள் வாழ்க்கைப் பயணத்தில் எது திருப்புமுனையாக அமைந்தது, என கேள்வி கேட்க்கப்பட்டது. அதற்கு, கே பாலச்சந்தரை சந்தித்தது தான். நான் நல்ல நடிகன் ஆவேன் என நினைத்தேன். ஆனால், ஹீரோ ஆவேன் என என்றும் நினைத்ததில்லை. எனக்கு கமல்ஹாசனைத் தெரியும். நீ தமிழைக் கற்றுக் கொள். பின்னர் பார், நான் உன்னை எங்கு அழைத்துச் செல்கின்றேன் என பாலச்சந்தர் கூறினார். அவர், என்னுள் இருந்த என்னை வெளிக் கொண்டு வந்தார்.

HOT NEWS