இந்தியா பாதுகாப்பற்ற நாடு எனவும், அந்நாட்டிற்கு மற்ற நாட்டு கிரிக்கெட் வீரர்கள் சுற்றுப் பயணம் மேற்கொள்ளக் கூடாது என ஐசிசி அறிவிக்க வேண்டும் என, முன்னாள் பாகிஸ்தான் வீரர் ஜாவீத் மியான்தத் தெரிவித்துள்ளார்.
கடந்த 2009ம் ஆண்டு, பாகிஸ்தானிற்கு இலங்கை சுற்றுப் பயணம் சென்றிருந்தது. அப்பொழுது, இலங்கை வீரர்கள் இருந்த பஸ்ஸின் மீது, தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். அப்பொழுது, பேருந்தில் இருந்த வீரர்கள் உட்பட பலர் இந்தத் தாக்குதலில் காயமடைந்தனர். இதனையடுத்து, பாகிஸ்தானில் விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்படுவதில்லை. தற்பொழுது, பாகிஸ்தானிற்கும் இலங்கைக்கும் இடையில் மீண்டும் கிரிக்கெட் போட்டிகள் நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில், முன்னாள் பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் கேப்டன் ஜாவீத் மியான்தத், இந்தியாவினைப் பற்றிப் பேசியுள்ளார். அவர் பேசுகையில், பாகிஸ்தான் பாதுகாப்பற்ற நாடு எனக் கூறும் மற்ற நாடுகள், எவ்வாறு எங்கள் நாடு பாதுகாப்பற்றது என முதலில் நிரூபிக்க வேண்டும். பின்னர், குறை கூறட்டம். இந்தியாவில் குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவானது, உலகம் முழுக்கவும் பேசப்பட்டு வருகின்றது. இந்தியாவினை உலகம் முழுமையாக கண்காணித்து வருகின்றது.
உண்மையைக் கூற வேண்டும் என்றால், இந்தியா தான் தற்பொழுது மிகவும் பாதுகாப்பு அச்சுறுத்தல் உள்ள நாடு. எனவே, அங்கு எந்த நாடும் சுற்றுப் பயணம் செய்யக் கூடாது என, ஐசிசி அறிவிக்க வேண்டும் எனக் கூறியுள்ளார். இவரைப் போல, பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத் தலைவர் எஹ்ஸான் மேனி கூறுகையில், பாகிஸ்தானை விட, இந்தியா தான் பாதுகாப்பு அச்சுறுத்தல் உள்ள நாடு எனக் கூறியுள்ளார்.
இதற்குப் பதிலடி கொடுக்கும் வகையில், பிசிசிஐ பொருளாளர் அருண் தூமல் கூறுகையில், லண்டனிலேயே பெரும்பாலான நாட்களை வாழ்ந்து வருபவர், இந்தியாவின் பாதுகாப்பினைப் பற்றிக் குறைக் கூறத் தகுதியற்றவர். ஏன், அவர் பாகிஸ்தானின் பாதுகாப்புப் பற்றிக் கூறுவதற்கு கூட, அருகதையற்றவர். ஒருவேளை அவர் பாகிஸ்தானில், அதிக நாட்கள் இருந்திருந்தால், அங்கு நிலவும் பாதுகாப்பு அச்சுறுத்தல் பற்றித் தெரிந்திருக்கும் எனக் கூறியுள்ளார்.