இந்தியா வெற்றி! தென் ஆப்பிரிக்கா ஒயிட் வாஷ் ஆனது!

22 October 2019 விளையாட்டு
indvssa3rdtest.jpg

தென் ஆப்பிரிக்காவிற்கு எதிரான போட்டியில், இந்தியா அணி அபார வெற்றி பெற்றது. இதன் மூலம் மூன்று போட்டிகள் கொண்டத் தொடரில், 3-0 என்ற கணக்கில் இந்திய அணி, தென் ஆப்பிரிக்கா அணியினை வென்று சாதித்துள்ளது.

இந்தியா தென் ஆப்பிரிக்கா பங்குபெற்ற மூன்றாவது டெஸ்ட் போட்டியானது, ராஞ்சியில் உள்ள ஜேஎஸ்சிஏ மைதானத்தில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி, பேட்டிங்கினைத் தேர்வு செய்தது.

இந்திய அணி முதல் இன்னிங்சில், 116.3 ஓவரில், 9 விக்கெட் இழப்புக்கு 497 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது. இந்திய அணி வீரர்கள் மயங்க் அகர்வால் 10, ரோகித் ஷர்மா 212, புஜரா 0, கோலி 12, ரஹானே 115, ஜடேஜா 51, சாஹா 24, அஸ்வின் 14, உமேஷ் யாதவ் 31, நதீம் 1, ஷமி 10 ரன்கள் குவித்தனர்.

ரோகித் ஷர்மா 255 பந்துகளில் 28 பவுண்டரி, 6 சிக்சர் உட்பட 255 ரன்கள் குவித்து அசத்தினார். அதே போல், அஜிங்கியா ரஹானேவும் 192 பந்துகளில் 17 பவுண்டரி மற்றும் ஒரு சிக்சர் உட்பட, 115 ரன்கள் குவித்தார்.

தென் ஆப்பிரிக்கா அணியின் சார்பில், லிண்டே 4 விக்கெட்டுகளையும், ரபாடா மூன்று விக்கெட்டுகளையும், அன்ரிட்ச் மற்றும் டேன் ஆகியோர் தலா, ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர்.

பின்னர், தன்னுடைய முதல் இன்னிங்சினை ஆடுவதற்கு தென் ஆப்பிரிக்கா அணி களமிறங்கியது. அந்த அணி, டெஸ்ட் மேட்சினை வெறும் 52 ஓவரில் முடித்து விட்டது எனலாம். அந்த அளவிற்கு, அந்த அணியின் வீரர்கள் வந்த வேகத்திற்குப் பெவிலியன் திரும்பி அதிர்ச்சி அளித்தனர். அந்த அணியின் எல்கர் 0, டீ காக் 4, ஹம்சா 62, டூ பிளசிஸ் 1, மவுமா 32, கிளாசன் 6, லிண்டே 37, பீட் 4, ரபாடா 0, நோர்டிச் 4 மற்றும் எங்கிடி 0 என, சொற்ப ரன்களில் அவுட்டாகி ஏமாற்றம் அளித்தனர்.

இந்திய அணியின் சிறந்த பந்து வீச்சால், தென் ஆப்பிரிக்காவினால் ரன் குவிப்பில் ஈடுபட முடியவில்லை. இந்திய வீரர்கள் ஷமி, நதீம் மற்றும் ஜடேஜா ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுகளையும், உமேஷ் யாதவ் 3 விக்கெட்டினையும் வீழ்த்தினர்.

பின்னர், பாலோ ஆன் ஆனதால், தன்னுடைய இரண்டாவது இன்னிங்சினைத் தொடங்கியது தென் ஆப்பிரிக்கா. இரண்டாவது இன்னிங்சினை, முதல் இன்னிங்சை விட வேகமாக முடித்துவிட்டது என்றால் அது மிகையாகாது. அந்த அணியின் வீரர்கள் டீ காக் 5, எல்கர் 16, ஹம்சா 0, டூ பிளசிஸ் 4, பவுமா 0, கிளேஷன் 5, லிண்டே 27, பீட் 23, டீ ப்ரூயன் 30, ரபாடா 12, நோர்டிச் 5 மற்றும் எங்கிடி 0 ரன்கள் சேர்த்தனர்.

தென் ஆப்பிரிக்கா அணி இரண்டாவது இன்னிங்சில், 48 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து, 133 ரன்கள் குவித்துப் படுதோல்வி அடைந்தது. இந்திய அணியின் முகம்மது ஷமி மூன்று விக்கெட்டுகளையும், உமேஷ் யாதவ் மற்றும் நதீம் தலா இரண்டு விக்கெட்டுகளையும், அஸ்வின் மற்றும் ஜடேஜா ஆகியோர் தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.

இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி, 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் போட்டியில், 3-0 என்ற கணக்கில் என்று, தென் ஆப்பிரிக்கா அணியினை ஒயிட் வாஷ் செய்துள்ளது. இன்னிங்ஸ் மற்றும் 202 ரன்கள் வித்தியாசத்தில், கோலி தலைமையிலான இந்திய அணி வென்று புதிய சாதனைப் படைத்துள்ளது.

இந்தத் தொடரின் நாயகனாக, ரோகித் ஷர்மா தேர்வு செய்யப்பட்டார். ஆட்ட நாயகன் விருதினையும் அவர் பெற்றார். இதுவரை நடந்துள்ள டெஸ்ட் போட்டிகளில், கோலி தலைமையிலான இந்திய அணி, 70% அதிகமான டெஸ்ட் போட்டிகளில் வென்று சாதனைப் படைத்துள்ளது. அதே போல், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தர வரிசைப் பட்டியலிலும், இந்திய அணி தொடர்ந்து 5 போட்டிகளில் வென்று முதல் இடத்தில் உள்ளது.

HOT NEWS