முதல் டி20 இந்தியா வெற்றி! வெ.இண்டீஸை எளிதாக வென்றது!

04 August 2019 விளையாட்டு
ind-vs-sl.jpg

நேற்று நடைபெற்ற முதல் டி20 போட்டியில், இந்திய அணி, மேற்கு இந்தியத் தீவுகள் அணியை எளிதாக வென்றது. மேற்கு இந்தியத் தீவுகளுக்கு சுற்றுப் பயணம் சென்றுள்ள இந்திய அணி, அங்கு தன்னுடைய முதல் டி20 போட்டியில், நேற்று விளையாடியது.

முதலில் டாஸ் வென்ற இந்திய அணி, பந்துவீச்சைத் தேர்வு செய்தது. இதனைத் தொடர்ந்து, வெ.இண்டீஸ் அணி வீரர்கள் பேட்டிங் செய்ய களமிறங்கினர். அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர் ஜான் கேம்ப்பெல் ரன் ஏதும் எடுக்காமல் வெளியேறினார். அவரைத் தொடர்ந்து மற்றொரு தொடக்க ஆட்டக்காரரான ஈவின் லீவிஸ்ம் ரன் ஏதும் எடுக்காமல் வெளியேறினார். பூரான் 20 ரன்களும், போலார்ட் 2 பவுண்டரி, 4 சிக்சர் உட்பட 49 பந்துகளில் 49 ரன்கள் எடுத்து வெளியேறினார். ஹெட்மேயர் 0, பவுல் 5, பிராத்வொயிட் 9, சுனில் நரைன் 2, கீமோ பவுல் 3 ரன்களை எடுத்தனர்.

வெ.இண்டீஸ் அணி 20 ஓவரில் 9 விக்கெட் இழப்புக்கு, 95 ரன்களை சேர்த்தது. இந்திய அணியின் பந்துவீச்சாளர்கள் சைனி 3, புவனேஷ்வர் குமார் 2, சுந்தர், அஹமத், பாண்ட்யா மற்றும் ஜடேஜா ஆகியோர், தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.

96 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி, 17.2 ஓவரில் 98 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. இந்திய அணியின் ரோகித் ஷர்மா 24, தவான் 1, கோலி 19, பண்ட் 0, பாண்டே 19, பாண்ட்யா 12, ஜடேஜா 10 சுந்தர் 8 ரன்களை சேர்த்தனர்.

மூன்று டி 20 போட்டிகளைக் கொண்டத் தொடரில், இந்திய அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.

HOT NEWS