கோழி முட்டை விலை அதிரடி சரிவு! ஆனால் கடைகளில் குறையவில்லை!

19 March 2020 அரசியல்
chickenprice.jpg

கொரோனா வைரஸ் பாதிப்புக் காரணமாக, கறிக் கோழிகளின் முட்டை மற்றும் கறிக் கோழிகளின் விலையானது, அதிரடியாகக் குறைந்துள்ளது. இதனால், கொள்முதல் செய்பவர்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

கோழிக் கறி சாப்பிட்டால் கொரோனா வைரஸ் பரவும் என, வாட்ஸ்அப்பில் புரளி பரவியது. அவ்வளவு தான். யாரும் கோழிக்கறியினை வாங்க முன்வரவில்லை. முன் எப்பொழுதும் இல்லாத அளவிற்கு, கோழிக்கறியின் விலையானது, கடுமையாகப் பாதிக்கப்பட்டு உள்ளது.

கறிக்கோழியின் விற்பனை மந்தமாகி இருப்பதால், அதன் கொள்முதல் விலையும் வீழ்ச்சி அடைந்துள்ளது. இதனால், வாரா வாரம் 15 கோடி அளவிற்கு நஷ்டம் ஏற்படுகின்றது எனவும், முட்டை உற்பத்தி தேக்கம் அடைந்துள்ளதால் வாரத்திற்கு 8 கோடி ரூபாய் அளவிற்கு நஷ்டம் ஏற்படுகின்றது எனவும் கணக்கிடப்பட்டு உள்ளது. மேலும், தமிழ்நாடு முட்டை கோழிப்பண்ணைகள் வர்த்தக சங்கத் தலைவர் செய்தியாளர்களிடம் பேசினார்.

அவர் பேசுகையில், கோழிக்கறி சாப்பிட்டால் கொரோனா வைரஸ் பரவும் என நிரூபித்தால், ஒரு கோடி ரூபாய் தர தயாராக இருப்பதாகவும் வீண் வதந்திகளை நம்ப வேண்டாம் எனவும் கூறினார்.

நாமக்கல்லில் இருந்து கொள்முதல் செய்யப்படும் ஒரு முட்டையின் விலையானது, இன்றைய நிலவரப்படி (19-03-2020) 1.95 ரூபாயாக உள்ளது. ஒரு நாளைக்கு சராசரியாக நான்கு கோடி முட்டைகள் உற்பத்தி செய்யப்பட்ட நிலையில், முட்டைகள் அதிகமாகத் தேக்கம் அடைந்து உள்ளதால், அதனை என்ன செய்வதென்று தெரியாமல் விழிபிதுங்கி உள்ளனர் பண்ணை வைத்திருப்பவர்கள்.

அதே போல் கறிக் கோழி ஒன்றின் விலையானது, ஒரு கிலோ 30 ரூபாய்க்கு கொள்முதல் செய்யப்படுகின்றது. இருப்பினும், கடைகளில் விற்க்கப்படும் ஒரு கிலோ கறியின் விலையானது, 60 முதல் 80 ரூபாய்க்கு விற்க்கப்படுகின்றது. கொள்முதல் செய்பவர்கள் நஷ்டம் அடைந்து வருகின்ற நிலையிலும், கோழிக்கறிக் கடை வைத்திருப்பவர்கள் லாபம் தான் அடைகின்றனர்.

ஒரு நாளைக்கு நான்கு கோடி முட்டைகள் உற்பத்தி செய்யப்பட்டாலும், இரண்டரை கோடி முட்டைகளே விற்கப்படுகின்றன. இதனால், ஒன்றரை கோடி முட்டையானது தினமும் தேக்கம் அடைகின்றது. கேரளாவில், கொரோனா வைரஸூடம், பறவைக் காய்ச்சலும் பரவி வருவதால் இதன் விலை இன்னும் குறைய வாய்ப்புகள் உள்ளன.

HOT NEWS