நேற்று இரவு வரை நீண்ட சென்னை மாணவர்கள் போராட்டம்!

19 December 2019 அரசியல்
madrasuniversity.jpg

சென்னை பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டம் நேற்று இரவுடன் முடிவிற்கு வந்தது.

இந்தியா முழுவதும், பல்வேறுப் பகுதிகளில் மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். டெல்லியில் உள்ள ஜாமியா மிலியா இஸ்லாமியா பல்கலைக் கழக மாணவர்கள் போராட்டத்தின் போது, போலீசார் தாக்கப்பட்டதைக் கண்டித்து, தற்பொழுது 25க்கும் மேற்பட்ட பல்கலைக் கழக மாணவர்கள் இந்தப் போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர்.

டெல்லி உட்பட பல நகரங்களில், 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. நாடு முழுவதும், தீவிர கண்காணிப்புக்கு உத்தரவு அறிவிக்கப்பட்டு உள்ளது. சமூக வலைதளங்கள் தீவிரமாக கண்காணிக்கப்படுகின்றன. டெல்லி மற்றும் அசாம் போன்ற மாநிலங்களில், தொலைத் தொடர்பு சேவை துண்டிக்கப்பட்டு உள்ளது.

கடந்த ஞாயிற்றுக் கிழமை மாலை முதல் தொடர்ந்துப் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த சென்னைப் பல்கலைக் கழக மாணவர்கள், நேற்று மாலையில் தங்களுடையப் போராட்டத்தினை முடித்தனர்.

கல்லூரிக்குள் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வந்த அவர்களை, கமல்ஹாசன் சந்தித்துப் பேசினார். இவர்களுடையப் போராட்டத்தினை அடுத்து, டிசம்பர் 23ம் தேதி வரை பல்கலைக் கழகம் விடுமுறை அறிவித்துள்ளது. இதனால் ஹாஸ்டல்கள் மூடப்பட்டன. இருப்பினும், மூன்றாவது நாளாகப் போராட்டத்தில் ஈடுபட்ட ஒரு சில மாணவர்களை போலீசார் அப்புறப்படுத்துவதற்காக, அவர்களைக் கைது செய்து காவல்நிலையம் அழைத்துச் சென்றனர். பின்னர் அங்கிருந்து அவர்களை விடுவித்தனர்.

மாணவர்கள் போராட்டம் முடிவுக்கு வந்ததை அடுத்து, கல்லூரி தொடர்ந்து 23ம் தேதி வரை விடுமுறை என அறிவிக்கப்பட்டு உள்ளது. தேர்வுகள் மற்றும் பிற வகுப்புகள் குறித்த அறிவிப்பு, பின்னர் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

HOT NEWS