ஆஸ்திரேலியா வெற்றி! ஆஷஸ் தொடரில் ஆதிக்கம்!

09 September 2019 விளையாட்டு
ashes4thtest.jpg

பரபரப்பாக நடைபெற்ற ஆட்டத்தில், ஆஸ்திரேலியா அணி இங்கிலாந்து அணியை எளிதாக வீழ்த்தி, வெற்றி பெற்றது. இதனால் 2-1 என்ற கணக்கில், ஆஷஸ் தொடரில் முன்னிலை வகிக்கிறது.

ஆஷஸ் தொடரின் நான்காவது ஆட்டம், செப்டம்பர் 4ம் தேதி தொடங்கியது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி, முதலில் பேட்டிங்கைத் தேர்வு செய்தது.

மென்செஸ்டர் நகரில் நடைபெற்ற போட்டியில், ஆஸ்திரேலியா அணி தன்னுடைய முதல் இன்னிங்சில், 126 ஓவரில், 8 விக்கெட் இழப்புக்கு, 497 ரன்கள் குவித்தது. ஸ்டீவ் ஸ்மித் அபாரமாக விளையாடி 24 பவுண்டரிகள், 2 சிக்சர்கள் உட்பட 319 பந்துகளில், 211 ரன்கள் குவித்து அசத்தினார். டிம் பெயின் 58 ரன்களும், ஸ்டார்க் 54 ரன்களும் எடுத்தனர். தன்னுடைய முதல் இன்னிங்சை 497 ரன்கள் எடுத்திருந்த நிலையில், டிக்ளேர் செய்தது, ஆஸ்திரேலியா அணி. இங்கிலாந்து அணியின் சார்பில், பிராட் 3 விக்கெட்டுகளையும், லீச் மற்றும் ஓவர்டன் தலா இரண்டு விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். ரூட் ஒரு விக்கெட்டினை வீழ்த்தினார்.

பின்னர் களமிறங்கிய இங்கிலாந்து, 107 ஓவரில், அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து, 301 ரன்கள் குவித்தது. பர்ன்ஸ் 81, ரூட் 71, பேர்ஸ்ட்டோ 41 ரன்கள் எடுத்தனர். ஆஸ்திரேலியா அணியின் ஹாசல்உட் 4 விக்கெட்டுகளையும், பேட் கும்மின்ஸ் மற்றும் ஸ்டார்க், தலா மூன்று விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

தன்னுடைய இரண்டாவது இன்னிங்சை ஆட களமிறங்கிய ஆஸ்திரேலியா அணி, 42.5 ஓவரில், 6 விக்கெட் இழப்புக்கு 186 ரன்கள் குவித்தது. ஸ்மித் அதிகபட்சமாக 82 ரன்களும், வேட் 34 ரன்களும் குவித்தனர். டிம் பெயின் 23 ரன்களும் குவித்தனர். 186 ரன்கள் எடுத்திருந்த நிலையில், ஆஸ்திரேலியா அணி டிக்ளேர் செய்தது. இங்கிலாந்து அணியின் பிராட் 2 விக்கெட்டுகளும், ஆர்ச்சர் 3 விக்கெட்டுகளும், லீச் ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.

383 ரன்கள் எடுக்க வேண்டும் என்ற கடினமான இலக்குடன் இங்கிலாந்து அணிக் களமிறங்கியது. அந்த அணி 91.3 ஓவரில், அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து, 197 ரன்கள் மட்டுமே எடுத்துத் தோல்வி அடைந்தது. அந்த அணியின் டென்லி அதிகபட்சமாக 53 ரன்களும், பட்ல்ர 34 ரன்களும், ராய் 21 ரன்களும் குவித்தனர். ஆஸ்திரேலியாவின் கும்மின்ஸ் 4 விக்கெட்டுகளையும், ஹாசல்உட் மற்றும் லயன் தலா, இரண்டு விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். மார்னஸ் ஒரு விக்கெட்டும் வீழ்த்தினார்.

இதனால், ஆஸ்திரேலியா அணி, 185 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிப் பெற்று அசத்தியது. 5 போட்டிகள் கொண்ட ஆஷஸ் தொடரில், 2-1 என்ற கணக்கில், ஆஸ்திரேலிய அணி முன்னிலைப் பெற்றுள்ளது. இரண்டு அணிகளுக்கும் இடையிலான, ஐந்தாவது போட்டி, வரும் 12ம் தேதி தொடங்க உள்ளது.

HOT NEWS