தளபதி விஜய் பாக்ஸ் ஆபிஸ் திரைப்படங்கள்!

21 June 2019 சினிமா
sarkarar.jpg

நடிகர் விஜயை நம் அனைவருக்குமே தெரியும். அவரைத் தெரியாத தமிழர்கள் இல்லை என்றுக் கூறலாம். அந்த அளவிற்கு இவர் பிரபலம். தமிழகத்தின் அடுத்த சூப்பர் ஸ்டார் எனக் கொண்டாடப்படுபவர். இவர் பலத் தோல்விப் படங்களையும் தந்துள்ளார். யாராலும் தர முடியாத பிளாக் பஸ்டர் திரைப்படங்களையும், தந்துள்ளார். அத்தகைய பிளாக் பஸ்டர் திரைப்படங்களைப் பற்றிப் பார்ப்போம்.

செந்தூரப்பாண்டி

இத்திரைப்படத்தினை, விஜய்யின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் இயக்கியிருந்தார். 1993ம் ஆண்டு வெளிவந்த இந்தத் திரைப்படம், விஜயின் இரண்டாவது திரைப்படம் ஆகும். சுமாராக ஓடியது எனினும், விஜய் எனும் நடிகனை உலகிற்கு காண்பித்தது.

விஷ்ணு

இந்தத் திரைப்படத்தையும், விஜயின் தந்தை திரு.எஸ்.ஏ.சந்திரசேகர் இயக்கியிருந்தார். தொடர்ந்து தோல்விப் படங்களை தந்து கொண்டிருந்த நிலையில், இந்த விஷ்ணு படம் 1995ம் ஆண்டு வெளிவந்து, ஆறுதல் அளித்தது.

பூவே உனக்காக

1996ம் ஆண்டு இயக்குநர் விக்ரமன் இயக்கத்தில் வெளிவந்த திரைப்படம் பூவே உனக்காக. விஜய்யின் முதல் ஹிட் திரைப்படமாக அமைந்தது. அப்பொழுது, முதல் அனைவரும் விஜயை, ஒரு நடிகனாகப் பார்க்க ஆரம்பித்தது.

லவ் டுடே

1997ம் ஆண்டு பாலசேகரன் இயக்கத்தில், நடிகர் விஜய் நடித்தத் திரைப்படம் லவ் டுடே. விஜயின் அடுத்த ஹிட் திரைப்படமாக, இத்திரைப்படம் அமைந்தது.

ஒன்ஸ் மோர்

1997 ஆம் ஆண்டு எஸ்.ஏ.சந்திரசேகர் இயக்கத்தில், ஒன்ஸ் மோர் திரப்படம் வந்தது. இந்தத் திரைப்படத்தில், விஜய் சிறப்பாக நடித்திருந்தார். படம் ஹிட் திரைப்படமானது. இத்திரைப்படத்திற்குப் பின், விஜய்க்கு அனைத்துப் படமுமே, நல்ல வளர்ச்சியைத் தந்தது.

நேருக்கு நேர்

1997 ஆம் ஆண்டு இயக்குநர் வஸந்த் இயக்கத்தில், நடிகர் விஜய் நடித்தத் திரைப்படம் நேருக்கு நேர். இத்திரைப்படம் ஹிட் லிஸ்டில் அப்பொழுது, முன்னிலையில் இருந்தது.

காதலுக்கு மரியாதை

1997ம் ஆண்டு பஸில் இயக்கத்தில் சூப்பர் ஹிட் திரைப்படமான காதலுக்கு மரியாதை திரைப்படம் வெளிவந்தது. இந்தத் திரைப்படம் விஜயை முன்னணி நடிகராக மாற்றியது. அப்பொழுது, பிரசாந்த் போன்ற பெரிய நடிகர்கள் மத்தியில், விஜயும் நின்று காட்டினார்.

ஒரு விஷயத்தை கவனித்தீர்களா! 1997ஆம் ஆண்டு சுமார் ஆறு படங்கள் வெளிவந்தது. அதில் ஐந்து படங்கள் ஹிட்.

துள்ளாத மனமும் துள்ளும்

1999ல் இயக்குநர் எழில் இயக்கத்தில், நடிகர் விஜய் நடிகை சிம்ரன் நடித்த திரைப்படம் துள்ளாத மனமும் துள்ளும். விஜயின் சூப்பர்ஹிட் திரைப்படமாக, இது அமைந்தது. இதில், வரும் பாடல்கள், விஜய் ரசிகர்கள் பலருக்கும் பேவரைட் பாடல்களாக, இன்றும் உள்ளன.

மின்சார கண்ணா

1999ம் ஆண்டு விஜய், ரம்பா, குஷ்பு, மணிவண்ணன் என மிகப் பெரிய நடிகர் பட்டாளமே நடித்து வெளிவந்த, திரைப்படம் மின்சார கண்ணா. இப்படத்தினை கமர்சியல் படங்களின் ரத்தினமாக உள்ள, கே.எஸ்.ரவிக்குமார் இயக்கியிருந்தார். படம் நல்ல வரவேற்பைப் பெற்றது.

கண்ணுக்குள் நிலவு

2000ம் ஆண்டு இயக்குநர் பஸிலும், நடிகர் விஜயும் மீண்டும் இணைந்து உருவான திரைப்படம் கண்ணுக்குள் நிலவு. ஒரு உணர்வுப்பூர்வமான படம் என்றுக் கூடக் கூறலாம். விஜயின் அந்தக் காலக்கட்ட ரசிகர்களால், கொண்டாடப்பட்டது.

குஷி

2000ம் ஆண்டில், இயக்குநர் எஸ்.ஜே.சூர்யா இயக்கத்தில், நடிகர் விஜய், நடிகை ஜோதிகா, விவேக் உட்பட பலர் நடித்திருந்த திரைப்படம் குஷி. விஜயின் மாபெரும் பிளாக்பஸ்டர் திரைப்படமாக இப்படம் மாறியது.

ப்ரியமானவளே

2000ம் ஆண்டே கே.செல்வ பாரதி இயக்கத்தில் வெளிவந்த ப்ரியமானவளே திரைப்படம் நல்ல பெயரை நடிகர் விஜய்க்கு, பெற்றுத் தந்தது. நடிகை சிம்ரனுடன் விஜய் வரும் காட்சிகள், இன்றும் ரசிக்கும்படியாக இருப்பதே, இந்தப் படத்தின் மாபெரும் வெற்றி ஆகும்.

ப்ரெண்ட்ஸ்

2001ம் ஆண்டு, இயக்குநர் சித்திக் இயக்கத்தில், நடிகர் விஜய், சூர்யா, வடிவேலு, தேவையானி மற்றும் பலர் நடித்திருந்த திரைப்படம் ப்ரெண்ட்ஸ். சூப்பர் ஹிட் திரைப்படமாக வெற்றிப் பெற்றதற்கு முக்கியக் காரணம், நம்ம காண்ட்ராக்டர் நேசமணி.

திருமலை

2003ம் ஆண்டு நடிகர் விஜய், முற்றிலும் புதிய பரிமாணத்துடன் களமிறங்கிய திரைப்படம் திருமலை. இப்படத்தினை இயக்குநர் ரமணா இயக்கியிருந்தார். இப்படத்தில், நடிகை ஜோதிகா, நடிகர் விவேக் நடித்திருப்பர். படம் வழக்கம் போல ஹிட்.

கில்லி

2004ம் ஆண்டு இயக்குநர் தரணி இயக்கத்தில், நடிகர் விஜய், நடிகை திரிஷா உட்பட பலர் நடித்திருந்த திரைப்படம் கில்லி. விஜயின் பிளாக் பஸ்டர் திரைப்படங்களின் மணிமகுடமாக இத்திரைப்படம் இன்று வரை உள்ளது. இப்படத்தில் வரும் அப்படிப் போடு பாடலுக்கு இன்றும், மேடைகளில் நடனம் ஆடுகின்றனர் என்பது, குறிப்பிட வேண்டிய விஷயம் ஆகும்.

திருப்பாச்சி

2005ம் ஆண்டு இயக்குநர் பேரரசு இயக்கத்தில் நடிகர் விஜய், நடிகை திரிஷா இணைந்த திரைப்படம் திருப்பாச்சி. அண்ணன், தங்கை பாசத்தை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்ட ஆக்ஷன் திரைப்படமாக, திருப்பாச்சி அமைந்தது. படமும் சூப்பர் ஹிட் தான்.

போக்கிரி

2007ம் ஆண்டு, விஜய்க்கு ஒரு பெரிய ஹிட் திரைப்படம் தேவைப்பட்ட காலம். எப்படியாவது, ஒரு ஹிட் படத்தைத் தந்தேத் தீர வேண்டும் என, விஜய் வெறித்தனமாக கதைகளை தேடி வந்தார். அப்பொழுது, நடிகர் பிரபுதேவா விஜயிடம் ஒரு கதை சொன்னார். அந்தக் கதைப் பிடித்துப் போக, இருவரும் இணைந்தனர். போக்கிரி படமும் உருவானது. இப்படத்தில் வரும் பாடல்கள் அனைத்தும் சூப்பர் ஹிட். படமும் சூப்பர் ஹிட்.

காவலன்

போக்கிரிப் படத்திற்குப் பின், தொடர்ந்துப் பல தோல்விப் படங்கள் என, விஜயின் மார்க்கெட் இறங்குமுகமாக இருந்தது. இதனைத் தொடர்ந்து, 2011ம் ஆண்டு, இயக்குநர் சித்திக் இயக்கத்தில், நடிகர் விஜய், அசின், வடிவேலு இணைந்த திரைப்படம் காவலன். படம் விஜயின் பெயரைக் காப்பாற்றியது.

நண்பன்

2012ம் ஆண்டு இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில், நடிகர் விஜய், ஜீவா, ஸ்ரீகாந்த் உட்பட பல பிரபலங்கள் நடித்திருந்த திரைப்படம் நண்பன். 3 இடியட்ஸ் எனும் ஹிந்தி திரைப்படத்தின் ரீமேக்காக இத்திரைபடம் உருவானது. படமும் நல்ல ஹிட்.

துப்பாக்கி

2012ம் ஆண்டு இயக்குநர் ஏஆர் முருகதாஸ் இயக்கத்தில், நடிகர் விஜய், நடிகை காஜல்அகர்வால் நடித்திருந்த திரைப்படம் துப்பாக்கி. இது நடிகர் விஜயை பாக்ஸ் ஆபிஸ் மன்னனாக உருவாக்கியது. படம் பட்டித் தொட்டி எங்கும், நூறு நாட்கள் ஓடி சாதனைப் படைத்தது.

கத்தி

2014ம் ஆண்டு நடிகர் விஜய் மற்றும் ஏஆர் முருகதாஸ் மீண்டும் ஒன்று சேர்ந்தனர். இப்படத்தில், நடிகை சமந்தா நடித்திருந்தார். மூன்று ஆண்டுகளுக்குள் இரண்டு பிளாக் பஸ்டர் திரைப்படங்கள் கொடுத்து நடிகர் விஜய், ரசிகர்களின் மனதில் அசைக்க முடியாத இடத்தைப் பிடித்து விட்டார். அது மட்டுமின்றி, விஜய் படங்களின் வியாபாரமும் சர்வதேச அளவில் உயர்ந்தது.

HOT NEWS