சூடுபிடிக்கும் கூட்டணி பேச்சுவார்த்தை! திமுக பிரம்மாண்ட கூட்டணி! அதிமுகவில் கூட்டணி குழப்பம்!

25 January 2021 அரசியல்
election-comission.jpg

வருகின்ற ஏப்ரல் மே மாதங்களில் தமிழக சட்டசபைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், தமிழக கட்சிகள் அனைத்தும் தற்பொழுது கூட்டணிப் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றன.

தமிழக சட்டமன்றத் தேர்தலுக்காக தமிழகத்தின் பிரதானக் கட்சிகளான திமுகவும், அதிமுகவும் தீவிரத் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றன. திமுகவின் தலைவர் முக ஸ்டாலின், மக்கள் கிராமசபைக் கூட்டத்தினை நடத்தி வருகின்றார். தற்பொழுது அது முடிவிற்கு வந்துள்ளது. இந்நிலையில் ஜனவரி 29ம் தேதி அன்று, அவர் தன்னுடையத் தேர்தல் பரப்புரையினை ஆரம்பிக்க உள்ளார். அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ்ஸூம் விரைவில் தேர்தல் பிரச்சாரத்தினை அறிவிக்க உள்ளார்.

அநேகமாக பிப்ரவரி மாதத் தொடக்கத்தில், தேர்தல் தேதி அறிவிக்கப்படும் வாய்ப்புகள் இருப்பதாக, தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனையொட்டி, தேர்தல் அறிக்கை மற்றும் தேர்தல் கூட்டணியினை முடிவு செய்யும் பொருட்டு, திமுக மற்றும் அதிமுக ஆகிய கட்சிகள் தீவிரமாக செயல்பட்டு வந்தன. திமுக கூட்டணியானது இன்னும் ஓரீரு வாரத்தில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

அதே போல் அதிமுகவில் தற்பொழுது வரை, கூட்டணி குறித்த குழப்பமானது நீடித்து வருகின்றது. அதிமுகவில் பாமக, தேமுதிக இருக்கின்றதா என இன்னும் அதிமுக கூறவில்லை. ஆனால், தேமுதிக தரப்பில் இருந்து, தொடர்ந்து நாங்கள் அதிமுக கூட்டணியில் தான் இருந்து வருகின்றோம் என தெரிவிக்கப்பட்டு வருகின்றது. பாமகவின் தரப்பில் இருந்து தொடர்ந்து அமைதியானது நீடித்து வருகின்றது.

தற்பொழுது அதிமுகவின் கூட்டணியில் பாஜக இருப்பது மட்டும் உறுதியாகி உள்ளது. தேர்தல் அறிவிக்கப்பட்ட உடன், கூட்டணி குறித்த அறிவிப்புகளும், தேர்தல் அறிக்கையும் முழுமையாக வெளியாகும் வாய்ப்புகள் உள்ளன. நாம் தமிழர் கட்சியானது, திராவிடக் கட்சிகளுடன் கூட்டணி வைக்கமால், பிற தமிழ் சார்ந்த கட்சிகளுடன் கூட்டணி வைக்க உள்ளதாக, தகவல்கள் தெரிவிக்கின்றன. அத்துடன், கமல்ஹாசன் தலைமையிலான மக்கள் நீதி மய்யம் கட்சியானது திமுகவுடன் கூட்டணி குறித்துப் பேசி வருவதாக, தகவல்கள் தெரிவிக்கின்றன. அதே போல், காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி குறித்து பேசுவதாகவும் தகவல் தெரிவிக்கின்றன.

காங்கிரஸ் கட்சியானது, திமுகவுடன் கூட்டணியில் இருந்து வருகின்றது என, திமுக தலைவர் முக ஸ்டாலின் இன்று தெரிவித்து உள்ளார். அவ்வாறு இருக்கும் பட்சத்தில், காங்கிரஸ் கட்சியின் அழைப்பினை ஏற்று, மக்கள் நீதி மய்யம் கட்சியும் திமுகவுடன் இணையும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இந்த தேர்தலில், தொடர்ந்து குழப்பமானது நீடித்து வருவது நிதர்சனமான உண்மை. அதற்கு முக்கியக் காரணமாக இருப்பது, ஊடகவியலாளர்கள் என்றுக் கூறினால், அது மிகையாகாது.

பெரும்பாலான ஊடகவியலாளர்கள் கருத்து தெரிவிக்கின்றேன் என்ற பெயரில், மறைமுகமாக தங்களுடையக் கருத்துக்களைத் திணித்து வருகின்றனர். இதன் காரணமாக, அரசியல் கட்சிகளிடமும், பொதுமக்களிடமும் குழப்பங்கள் ஏற்பட்டு உள்ளன. அரசியல் கட்சிகளை பொறுத்த வரையில், ஏற்கனவே நாடாளுமன்றத் தேர்தலில் இருந்தக் கூட்டணியில் ஒருசில மாற்றங்கள் மட்டுமே ஏற்படும் வாய்ப்புகள் இருக்கின்றன. இனி வரும் காலங்களில், சசிகலா அவர்களின் முடிவும், அமமுக கட்சியின் செயல்பாடுமே, இந்தத் தேர்தலினை நிர்ணயிக்கும் என்றால் அது மிகையாகாது.

HOT NEWS