நான் சிஎஸ்கே அணியில் தான் உள்ளேன்! தோனி எனக்கு மிகவும் முக்கியமானவர்!

03 September 2020 விளையாட்டு
sureshrainaleft.jpg

நான் சிஎஸ்கே அணியில் தான் உள்ளேன் எனவும், தோனி எனக்கும் மிகவும் முக்கியமானவர் எனவும் கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னா தெரிவித்து உள்ளார்.

கடந்த சில வாரங்களுக்கு முன்பு, சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றார் சுரேஷ் ரெய்னா. அதனையடுத்து, அவர் ஐபிஎல் போட்டிகளில் கட்டாயம் விளையாடுவேன் என்றுக் கூறினார். அதனைத் தொடர்ந்து, அவர் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற உள்ள ஐபிஎல் போட்டிகளுக்காக கிளம்பிச் சென்றார்.

திடீரென்று அமீரகத்தில் இருந்து, இந்தியாவிற்குத் திரும்பினார் ரெய்னா. மேலும், இந்த ஆண்டு நடைபெறும் போட்டிகளில் கலந்து கொள்ள மாட்டேன் எனவும் கூறியிருந்தார். இது பெரும் சர்ச்சையினை ஏற்படுத்தியது. அவருக்கும் அணி நிர்வாகத்திற்கும் பிரச்சனை எனவும், அவருக்கும் தோனிக்கும் இடையில் பிரச்சனை எனவும் கூறப்பட்டது. இந்நிலையில், சிஎஸ்கே அணியின் உரிமையாளர் சீனிவாசன் சுரேஷ் ரெய்னாவினை கடுமையாக விமர்சித்து இருந்தார்.

இந்த சூழ்நிலையில், நேற்று செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தார் ரெய்னா. அவர் பேசுகையில், எனக்கும் தோனிக்கும் இடையில் எவ்விதப் பிரச்சனையும் இல்லை. அவர் எனக்கு மிகவும் முக்கியமானவர். சிஎஸ்கே அணியில் தான், நான் இன்னும் இருக்கின்றேன். நான் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து விடைபெற்று இருந்தாலும், மிகவும் இளமையாகத் தான் உள்ளேன். எனவே, குறைந்தது நான்கு அல்லது 5 ஆண்டுகளுக்கு சிஎஸ்கே அணிக்காக விளையாடுவேன்.

சீனிவாசன் திட்டியதை நான் பொருட்படுத்தவில்லை. ஒரு தந்தை தன்னுடைய மகனைத் திட்டுவதைப் போலத் தான் எடுத்துக் கொண்டுள்ளேன். அவர் என்னை, தன்னுடைய இளைய மகனாகவேப் பாவித்தார். நான் என்னுடைய சொந்த விஷயங்களுக்காக நாடு திரும்பியுள்ளேன். 12.5 கோடி ரூபாயினை யாரும் எதற்காகவும் விட்டுத் தர மாட்டார்கள். ஆனால், நான் வந்துள்ளேன் என்றால், இது எவ்வளவு பெரிய விஷயமாக இருக்கும் எனத் தெரிந்து கொள்ளுங்கள்.

நான் நாடு திரும்பியுள்ள போதிலும், கிரிக்கெட் பயிற்சியில் தான் ஈடுபட்டு உள்ளேன். கண்டிப்பாக சிஎஸ்கே அணிக்காக விளையாடுவேன். அதில் எவ்வித மாற்றுக் கருத்தும் இல்லை. சிஎஸ்கே அணிக்கு தன்னுடைய வாழ்த்துக்களையும் அவர் தெரிவித்து உள்ளார்.

HOT NEWS