புயலாக வந்த சசிகலா! அதிமுக கொடி தான்! அதே கம்பீரம்! 300க்கும் மேற்பட்ட வாகனங்கள்!

08 February 2021 அரசியல்
sasikalachennai.jpg

இன்று பலத்த எதிர்பார்ப்புகளுக்கு இடையில், சிறையில் இருந்து விடுதலையாகி உள்ள சசிகலா சென்னைக்கு வந்து கொண்டு இருக்கின்றார்.

சொத்துக் குவிப்பு வழக்கில் இளவரசி, திவாகரன் ஆகியோருடன் சிறையில் அடைக்கப்பட்ட சசிகலா, கடந்த ஜனவரி 27ம் தேதி அன்று சிறையில் இருந்து விடுதலை செய்யப்பட்டார். அவருக்கு கொரோனா தொற்று இருந்த காரணத்தினால், தனிமைப்படுத்தப்பட்டு தற்பொழுது சென்னைக்கு திரும்பியுள்ளார். சசிகலா வருகையினை ஒட்டி, அதிமுகவினரிடையே பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.

ஜெயலலிதாவின் நினைவிடம் ஏற்கனவே மூடப்பட்டு உள்ள நிலையில், ஜெயலலிதாவின் நினைவில்லமும் மூடப்பட்டு உள்ளது. மேலும், சசிகலா அதிமுக கொடியினைப் பயன்படுத்தக் கூடாது, ஊர்வலம் வரக் கூடாது, பேனர் வைக்கக் கூடாது எனப் பலவித கட்டுப்பாடுகளை தமிழக அரசு விதித்தது. இதனை எல்லாம் கண்டு கொள்ளாமல், தமிழகத்தினை நோக்கி சுமார் 300 கார்களில் தன்னுடைய ஆதரவாளர்களுடன் தமிழகத்திற்கு வந்துள்ளார் சசிகலா.

வரும் பொழுது, தன்னுடையக் காரில் அதிமுகவின் கட்சிக் கொடியுடன் பெங்களூருவில் இருந்து கிளம்பினார். வழிநெடுகிலும் அவருக்கு உற்சாக வரவேற்பு வழங்கப்பட்டது. அவரை கிருஷ்ணகிரி அருகே தடுத்த காவல்துறையினர், அதிமுக கொடியினை நீக்கக் கூறினார்கள். சசிகலாவோ தன்னுடையக் காரில் இருந்து இறங்கி, அதிமுக பிரமுகரின் காரில் ஏறி சென்னைக்கு வந்தார்.

இதனை யாரும் எதிர்பார்க்கவில்லை. தொடர்ந்து வந்த அவருக்கு, ஓசூர் பகுதியில் பிரம்மாண்டமான வரவேற்பானது வழங்கப்பட்டது. அவருடைய வாகனத்தினை வழிமறித்த போலீசார், அவருக்கு நோட்டீஸ் வழங்கினர். அதனை, சசிகலாவின் வழக்கறிஞர் ராஜா செந்தூர்பாண்டியன் பெற்றுக் கொண்டார். இன்று சுமார் 56 இடங்களில், சசிகலாவிற்கு உற்சாக வரவேற்பு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

காரில் அமர்ந்தபடியே, இருவிரலைக் காட்டி இரட்டை இலை என்ற அர்தத்தில், தொடர்ந்து தன்னுடைய தொண்டர்களுக்கு வணக்கம் கூறியபடியே சென்னைக்குள் வந்துள்ளார் சசிகலா. இவருடைய இந்த வருகையில், தமிழக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.

HOT NEWS