கடந்த 19ம் தேதி தொடங்கிய மும்பை-உத்திரப்பிரதேசம் ரஞ்சிக் கோப்பைக் கிரிக்கெட் போட்டியில், சர்ப்பராஸ் கான் முச்சதம் விளாசி அசத்தியுள்ளார்.
மும்பை கிரிக்கெட் அணிக்கும்-உத்திரப்பிரதேச கிரிக்கெட் அணிக்கும் இடையிலான போட்டியானது, மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் நடைபெற்றது. இதில், முதலில் பேட் செய்த உத்திரப்பிரசே அணியானது 8 விக்கெட் இழப்பிற்கு 625 ரன்கள் குவித்தது. அந்த அணியின் உபேந்திரா யாதவ் 203 ரன்கள் குவித்து கலக்கினார்.
இந்நிலையில், தன்னுடைய முதல் இன்னிங்சினை ஆட, மும்பை அணி களமிறங்கியது. அந்த அணியும் அதிரடி ரன் குவிப்பில் ஈடுபட்டது. இறுதி நாளான நேற்று, மும்பை அணி தன்னுடைய முதல் இன்னிங்சை தொடர்ந்து விளையாடியது. அந்த அணி, 166.3 ஓவரில் ஏழு விக்கெட் இழப்பிற்கு 688 ரன்கள் குவித்தது. அந்த அணியின் சர்ப்பராஸ் கான் அதிரடியாக விளையாடி, 391 பந்துகளில், 30 பவுண்டரி மற்றும் 8 சிக்சர் உட்பட 301 ரன்கள் குவித்து மாஸ் காட்டினார்.
இவருடைய இந்த ஆட்டத்தினை, இந்திய கிரிக்கெட் அணியின் வீரர்கள் பாராட்டி வருகின்றனர். மும்பை அணிக்காக முச்சதம் அடித்த ஏழாவது வீரர் என்றப் பெருமையையும் சர்ப்பராஸ் கான் பெற்றுள்ளார்.