மீண்டும் அறுவை சிகிச்சை! பிரச்சாரத்தினை நிறுத்தும் கமல்ஹாசன்!

17 January 2021 சினிமா
kamalhaasanrest.jpg

காலில் அறுவை சிகிச்சை செய்ய உள்ளதன் காரணமாக, தேர்தல் பிரச்சாரத்தினை தற்காலிகமாக நிறுத்துவதாக, கமல்ஹாசன் தெரிவித்து உள்ளார்.

கடந்த டிசம்பர் மாதம் முதல், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தீவிரத் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வந்தார். புயல் வேகத்தில் பல மாவட்டங்களுக்குச் சென்ற அவர், பல கூட்டங்களில் கலந்து கொண்டு, பொதுமக்கள் மத்தியிலும், கட்சியினர் மத்தியிலும் பேசி வருகின்றார். அவருக்கு பொதுமக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்து வருகின்றது. இன்னும் இரண்டு மாதங்களே தேர்தலுக்கு உள்ள நிலையில், தற்பொழுது புதிய அறிக்கை ஒன்றினை கமல்ஹாசன் வெளியிட்டு உள்ளார்.

அதில், என் மீது அன்பு உள்ள அனைவருக்கும் என்னுடைய வணக்கங்கள். தன்னுடைய சீரமைப்போம் தமிழகத்தை என்ற முதற்கட்டத் தேர்தல் பிரச்சாரத்தினை ஐந்து பாகங்களாக ஐந்தாயிரம் கிலோமீட்டர்கள் பயணித்து தமிழ் மக்களை சந்தித்து வந்தேன். அதே போல பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியினையும் முடித்து உள்ளேன். சில ஆண்டுகளுக்கு முன்னர் ஏற்பட்ட விபத்தின் காரணமாக, என்னுடைய காலில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.

தொடர்ச்சியாக இன்னொரு அறுவை சிகிச்சையும் செய்ய வேண்டி இருந்தது. மருத்துவர்களும் ஓய்வெடுக்க அறிவுறுத்தினர். இருப்பினும், அதனை மீறித் தான் அனைத்து செயல்களிலும் ஈடுபட்டு வந்தேன். பிரச்சாரத்தினை துவங்கும் பொழுது, என்னுடையக் காலில் வலி ஏற்பட்டது. அதற்கு மக்களின் அன்பானது மருந்தாக அமைந்தது. இப்பொழுது சற்று ஓய்வுக் கிடைத்துள்ளது. இந்தக் காலக் கட்டத்தில், சிறு அறுவை சிகிச்சை மேற்கொள்ள இருக்கின்றேன். எனவே, சில நாட்கள் ஓய்வு பெற்றுவிட்டு பின்னர் மீண்டும் முழு உத்வேகத்துடன் வேலை செய்வேன்.

இருப்பினும், வீடியோக்கள் மற்றும் இணையத்தின் வாயிலாக உங்களுடன் தொடர்பில் இருப்பேன். என் மக்களுக்கும், மொழிக்கும், மண்ணுக்கும் சிறு துன்பம் என்றாலும் என் குரல் எங்கும் எப்பொழுதும் ஒலிக்கும். அது இப்பொழுதும் தொடரும் என அவர் அறிக்கை வெளியிட்டு உள்ளார்.

HOT NEWS