இந்தியா வெற்றி! ரோகித் ஷர்மா கலக்கல் பேட்டிங்!

08 November 2019 விளையாட்டு
rohitsharmat20.jpg

நேற்று நடைபெற்ற இரண்டாவது டி20 போட்டியில், இந்தியா அணி வங்கேதேச அணியினை வென்று அசத்தியது.

இந்தியாவிற்கு சுற்றுப் பயணம் வந்துள்ள வங்கதேச அணி, மூன்று டி20 போட்டிகள் மற்றும் டெஸ்ட் போட்டிகளில் விளையாட உள்ளது. இதில் தற்பொழுது டி20 தொடர் நடைபெற்று வருகின்றது.

முதல் டி20 போட்டியில், வங்கதேச அணி வெற்றி பெற்றது. இதனால், இரண்டாவது போட்டியில் இந்திய அணி வென்றேத் தீர வேண்டும் என்ற நிலைக்குத் தள்ளப்பட்டது. நேற்று மாலை, ஏழு மணிக்கு இப்போட்டி ஆரம்பித்தது. டாஸ் வென்ற இந்திய அணி, முதலில் பந்துவீச்சினைத் தேர்வு செய்தது.

இதனால், முதல் இன்னிங்சில் வங்கதேச அணி களமிறங்கியது. நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில், வங்கதேச அணி ஆறு விக்கெட் இழப்புக்கு 153 ரன்கள் குவித்தது. அந்த அணியின் வீரர்கள் லிட்டன் தாஸ் 29 (21), மொஹம்மத் நயீம் 36 (31), சௌமியா சர்கார் 30 (20), ரஹீம் 4 (6), மஹமத்துல்லா 30 (21), அபிப் ஹோசைன் 6(8), மொசைதீக் ஹோசேன் 7(9) மற்றும் அமினுல் இஸ்லாம் 5(5) ரன்கள் எடுத்தனர்.

இந்திய அணியின் சார்பில், சாஹல் 2 விக்கெட்டுகளையும், வாஷிங்டண் சுந்தர், கலீல் அஹமத் மற்றும் தீபக் சாஹர் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டினையும் வீழ்த்தினர்.

154 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன், இந்திய அணிக் களமிறங்கியது. ரோகித் ஷர்மா 43 பந்துகளில் 6 பவுண்டரி, 6 சிக்சர் என அதிரடி ஆட்டத்தில் ஈடுபட்டு 83 ரன்கள் குவித்தார். சிக்கர் தவான் 27 பந்துகளில் 31 ரன்கள் சேர்த்து அவுட் ஆனார். லோகேஷ் ராகுல் 11 பந்துகளில் 8 ரன்களும், ஷ்ரேயஸ் ஐயர் 13 பந்துகளில் 24 ரன்கள் குவித்தனர்.

வங்கதேச அணியின் அமினுல் இஸ்லாம் இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தினார். வெறும் இரண்டு விக்கெட்டுகளை இழந்து, 15.4 ஓவரில், 154 ரன்களை குவித்து, இந்திய அணி வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம், மூன்று போட்டிகள் கொண்ட தொடரில் இந்தியா மற்றும் வங்கதேச அணிகள் தலா ஒரு வெற்றியினைப் பதிவு செய்தனர். மூன்றாவது போட்டியில் வெல்பவரே, டி20 தொடர் வென்றவராவார்.

HOT NEWS