நியூசிலாந்தை வீழ்த்தி இங்கிலாந்து சாம்பியன்! உலகக் கோப்பையைக் கைப்பற்றியது!

15 July 2019 விளையாட்டு
englandchampion.jpg

நேற்று நடைபெற்ற பரபரப்பான ஆட்டத்தில், இங்கிலாந்து அணி, நியூசிலாந்து அணியை வென்று, முதல் முறையாக சாம்பியன் பட்டத்தை வென்றது.

லண்டனில் உள்ள லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற, உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் இறுதிப் போட்டியில், இங்கிலாந்து அணியும், நியூசிலாந்து அணியும் மோதின. டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பேட்டிங்கைத் தேர்வு செய்தது.

அந்த அணியின் வீரர்கள் குப்தில் 19, நிக்கோல்ஸ் 55, வில்லியம்சன் 30, டெய்லர் 15, லாதம் 47, நீஷம் 19, கிராண்ட்ஹோம் 16, சாண்ட்னர் 5, ஹென்றி 4 மற்றும் போல்ட் 1 ரன் எடுத்தனர். நியூசிலாந்து அணி 50 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 241 ரன்கள் எடுத்தது.

இங்கிலாந்து அணியின் வோக்ஸ் மற்றும் பிளங்கெட், தலா 3 விக்கெட்டுகளையும், ஆர்ச்சர் மற்றும் வுட், தலா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர்.

242 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன், இங்கிலாந்து அணி களமிறங்கியது. இங்கிலாந்து அணியின் வீரர்கள் ராய் 17, பேர்ஷ்டோ 36, ரூட் 7, மோர்கன் 9 ரன்கள் எடுத்தனர். பென் ஸ்டோக்ஸ் கடைசி வரை ஆட்டமிழக்காமல் 98 பந்துகளில் 5 பவுண்டரி, 2 சிக்சர் 84 ரன்கள் சேர்த்தார். பட்லர் 60 பந்துகளில் 6 பவுண்டரிகளுடன் 59 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். வோக்ஸ் 2, பிளங்க்கெட் 10 ரன்கள் சேர்த்தனர். 50 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 241 ரன்கள் சேர்த்தது. இரண்டு அணிகளும் 241 ரன்கள் சேர்த்ததால், ஆட்டம் சமனில் முடிந்தது.

இதனைத் தொடர்ந்து சூப்பர் ஓவர் அமல்படுத்தப்பட்டது. இங்கிலாந்து அணி சூப்பர் ஓவரில் ஒரு பவுண்டரி உட்பட 15 ரன்கள் சேர்த்தது. 16 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் நியூசிலாந்து அணி களமிறங்கியது. இங்கிலாந்து அணியின் ஆர்ச்சர் பந்துவீசினார். நியூசிலாந்து அணி சூப்பர் ஓவரில் 15 ரன்கள் சேர்த்துவிட்டது. இருப்பினும், இங்கிலாந்து அணி பவுண்டரி அடித்து இருந்ததால், அந்த அணி வெற்றிப் பெற்றதாக அறிவிக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து, இங்கிலாந்து அணி தன்னுடைய முதல் சாம்பியன் பட்டத்தைப் பெற்றது. பென் ஸ்டோக்ஸ் ஆட்ட நாயகன் விருது பெற்றார். நியூசிலாந்து அணியின் கேப்டன் கேன் வில்லியம்சன் தொடர்நாயகன் விருது பெற்றார். தொடர் நாயகன் விருதை சச்சின் டெண்டுல்கர் வழங்கினார்.

HOT NEWS