கொரோனா தடுப்பூசி ஒத்திகை தமிழகத்தில் துவங்கியது! அனைவருக்கும் இலவசம்!

02 January 2021 அரசியல்
covidvaccine19.jpg

தமிழகத்தில் தற்பொழுது கொரோனா வைரஸிற்கான தடுப்பூசி போடும் ஒத்திகையானது, துவக்கப்பட்டு உள்ளது.

உலகம் முழுக்க கொரோனா வைரஸானது, வேகமாகப் பரவி வருகின்றது. இதற்கு தடுப்பூசி தயாரிக்கும் பணியில் உலகின் பல முன்னணி நாடுகள் ஈடுபட்டு இருந்தன. அமெரிக்காவின் பைசர் மற்றும் மாடர்னா நிறுவனங்கள், புதியதாக தடுப்பு மருந்தினைக் கண்டுபிடித்திருந்தன. அதனை தற்பொழுது பொதுமக்கள் பயன்பாட்டிற்கு அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது. ரஷ்யாவில் ஸ்புட்னிக் வி மருந்தானது பயன்பாட்டிற்கு வந்துள்ளது. இந்தியாவில் இந்த வைரஸால் ஒரு கோடிக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

இந்த வைரஸிற்கு இந்தியாவில் கோவாக்சின் மற்றும் கோவீசீல்ட் உள்ளிட்ட மருந்துகள் இறுதிக் கட்ட சோதனையில் இருந்தன. இதில், கோவீசீல்ட் மருந்திற்கு, நேற்று மத்திய அரசு நீண்ட ஆலோசனைக்குப் பின், அவசரகால பயன்பாட்டிற்காக அனுமதி வழங்கப்பட்டு உள்ளது. கோவாக்சின் மருந்தின் மீதான முழு விவரமும் கிடைத்தப் பின்னரே, இதனைப் பயன்படுத்துவது குறித்து முடிவு செய்யப்படும் என மத்திய அரசு தெரிவித்து உள்ளது.

இந்த சூழலில், கோவீசீல்ட் மருந்தினை பயன்படுத்துவதற்காக, தமிழகத்தில் இன்று தடுப்பூசி ஒத்திக்கையானது துவங்கி உள்ளது. இந்த மருந்தானது முதலில், முதல்நிலைப் கொரோனா தடுப்பு பணியாளர்களுக்கு வழங்கப்பட உள்ளது. நான்கு முதல் ஆறு வார இடைவெளியில் இரண்டு டோஸ்கள் எடுத்துக் கொள்ள வேண்டும் என, அறிவுறுத்தப்பட்டு உள்ளது. வருகின்ற ஜூன் மாதத்திற்குள் இந்தியாவில், மொத்தம் 30 கோடி பேருக்கு இந்த ஊசியானது செலுத்தப்படும் என சீரம் இன்ஸ்ட்டிடியூட் தெரிவித்துள்ளது.

அதில் முதல் 10 கோடி பேருக்கான பணத்தினை, பிரதமரின் பிஎம்கேர்ஸ் அமைப்பே பணத்தினை செலுத்தும் எனக் கூறியுள்ளது. ஒரு டோஸின் விலையானது 250 ரூபாய் என, விலை நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இந்நிலையில், நாடு முழுவதும் உள்ள அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி இலவசமாக வழங்கப்படும் என, மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷவர்தன் தெரிவித்து உள்ளார்.

HOT NEWS