மோடி உட்பட 2.5 லட்சம் சர்வதேச தலைவர்களை கண்காணிக்கும் சீனா! இந்தியா மீது ஹைபிரிட் போர்!

15 September 2020 அரசியல்
spypeople.jpg

உலகின் 2,50,000க்கும் மேற்பட்ட முக்கியத் தலைவர்களை, சீனா உளவு பார்த்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

சீனாவின் மீது நாளுக்கு நாள் குற்றச்சாட்டுகள் அதிகரித்து வண்ணம் உள்ளன. அந்த அளவிற்கு, அந்த நாடு பல சதித் திட்டங்களை தீட்டிய வண்ணம் உள்ளது. அதனை பலரும் வெளிச்சத்திற்குக் கொண்டு வந்து கொண்டே இருக்கின்றனர். அமெரிக்காவினைச் சேர்ந்த பேராசிரியர் கிறிஸ்டோபர் என்பவர், சீனா எவ்வாறு உலக நாடுகளை உளவு பார்க்கின்றது என தற்பொழுது கூறியுள்ளார்.

இந்தியாவின் தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ், இங்கிலாந்தின் டெய்லி டெலிகிராப், ஆஸ்திரேலிய நாட்டின் பைனான்சியல் ரிவீயூ உள்ளிட்ட செய்தி நிறுவனங்களின் வாயிலாக இந்த விஷயத்தினைப் பற்றிக் கூறியுள்ளார். சீனா இராணுவத்திற்கு நெருக்கமாக ஜென்ஹூவா என்ற நிறுவனம் உள்ளது. இதன் கிளைகள் உலகின் 20க்கும் மேற்பட்ட நாடுகளில் உள்ளன. இந்த நிறுவனமானது, உலகின் இரண்டரை லட்சத்திற்கும் அதிகமானத் தலைவர்களின் தகவல்களைத் திரட்டிய வண்ணம் இருக்கின்றது.

தினமும் 2 கோடிக்கும் அதிகமானத் தகவல்களை அந்த நிறுவனம் சேகரித்து வருகின்றது. இந்தியாவின் பிரதமர் மோடி, குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உள்ளிட்ட 10,000க்கும் அதிகமானோரை இந்த நிறுவனம் தற்பொழுது வரை உளவு பார்த்து வருகின்றது. தமிழக முன்னாள் முதல்வர்கள், இன்னாள் முதல்வர்கள், நீதிபதிகள், தொழிலதிபர்கள் எனப் பலரையும் இந்த நிறுவனம் உளவு பார்த்து உள்ளது. அத்துடன் அவர்களது குடும்பத்தாரையும், இந்த அமைப்பு உளவு பார்த்திருப்பதனை கிறிஸ்டோபர் வெளிக் கொண்டு வந்துள்ளார்.

சீனாவில் உள்ள பெக்கிங் பல்கலைக் கழகத்தில் பேராசிரியராக ஒன்பது ஆண்டுகள் பணியாற்றிய கிறிஸ்டோபர், தற்பொழுது வியட்நாமின் புல்பிரைட் பல்கலைக் கழகப் பேராசிரியராக பணியாற்றி வருகின்றார். இந்தியாவில் 10,000 பேர், அமெரிக்காவில் 52,000 பேர், ஆஸ்திரேலியாவில் 35,000 பேர், கனடாவில் 5,000 பேர், இந்தோனேஷியாவில் 2,100 பேர், மலேசியாவில் 1,400 பேர் உள்ளிட்டோரை சீனா உளவுப் பார்த்துள்ளது. இந்தியாவின் அனைத்து எம்பிக்கள், சினிமாப் பிரபலங்கள், விளையாட்டு வீரர்கள் என ஒருவரையும் அந்த உளவு அமைப்பு விடவில்லை என்றுக் கூறியுள்ளார்.

அவர் மேலும் கூறுகையில் இந்தியாவின் மீது ஹைபிரிட்போர் நடத்த வாய்ப்பிருப்பதாகவும் தெரிவித்து உள்ளார். உதாரணத்திற்கு இஸ்ரேல் நாட்டினை ஈரான் அரசு நேரடியாகத் தாக்கவில்லை. அதற்குப் பதிலாக, ஹிஸ்புல் முஜாஹிதின் அமைப்பினைப் பயன்படுத்தி மறைமுகத் தாக்குதலை நடத்தி வருகின்றது. இதற்குப் பெயர் தான் ஹைபிரிட் போர். இதனைப் போல இந்தியாவின் மீது, சீனா நடத்துவதற்கும் அதிக வாய்ப்புகள் உள்ளன.

தற்பொழுது லடாக் எல்லையில், இந்தியாவுடன் நேரடியாக மோதி வரும் சீனா, விரைவில் ஹைபிரிட் போரினை நடத்தும் என்றும் எச்சரித்து உள்ளார். பேஸ்புக், டிவிட்டர், லிங்க்டு இன், இன்ஸ்டாகிராம் மற்றும் பல சமூக வலைதளங்களை முழுவதுமாக உளவு பார்த்து வருவதாகவும், இந்தியாவிற்குள் உள்நாட்டுக் குழப்பத்தினை சீனா உருவாக்கலாம் எனவும் அவர் கூறியுள்ளார்.

HOT NEWS