என்ன மேட்ச்யா! இங்கிலாந்து திகில் வெற்றி!

26 August 2019 விளையாட்டு
stokes.jpg

இங்கிலாந்துக்கு எதிரான மூன்றாவது போட்டியில், ஆஸ்திரேலியா அணி தோல்வியடைந்தது. டாஸ் வென்ற இங்கிலாந்து அணி, பந்துவீச்சினைத் தேர்வு செய்தது. ஆகஸ்ட் 22ம் தேதி ஆரம்பித்த போட்டியானது. நேற்று இங்கிலாந்தின் வெற்றியுடன் முடிவடைந்தது.

தன்னுடைய முதல் இன்னிங்சை ஆரம்பித்த ஆஸ்திரேலியா அணி, 52.1 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து, 179 ரன்கள் சேர்த்தது. அந்த அணியின் சார்பில் அதிகபட்சமாக மார்னஸ் 74 ரன்களும், டேவிட் வார்னர் 61 ரன்களும் சேர்த்தனர். இங்கிலாந்து சார்பில், ஆர்சர் 6 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். பிராட் 2, வோக்ஸ் மற்றும் ஸ்டோக்ஸ் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டினை வீழ்த்தி அசத்தினர்.

பின்னர் களமிறங்கிய இங்கிலாந்து அணி தன்னுடைய முதல் இன்னிங்சில் வெறும் 67 ரன்களுக்கு ஆட்டமிழந்து அதிர்ச்சி அளித்தது. அந்த அணியின் வீரர் ஜோ டென்லி 12 ரன்களை அதிகபட்சமாக சேர்த்தார். மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர்.

ஆஸ்திரேலியா அணியின் சார்பில், ஹாசல்உட் 5 விக்கெட்டுகளையும், கும்மின்ஸ் 3 விக்கெட்டுகளையும், பேட்டின்சன் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். பின்னர் தன்னுடைய இரண்டாவது இன்னிங்சை ஆரம்பித்த ஆஸ்திரேலியா அணி, 75.2 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து, 246 ரன்கள் குவித்தது. மார்னஸ் 80, வேட் 33, கவாஜா 23 மற்றும் பேட்டின்சன் 20 ரன்கள் சேர்த்தனர்.

இங்கிலாந்து அணியின் சார்பில், ஸ்டோக்ஸ் 3 விக்கெட்டுகளையும், ஆர்ச்சர் மற்றும் பிராட் இரண்டு விக்கெட்டுகளையும், ஓக்ஸ் மற்றும் லீச் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர்.

359 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன், இங்கிலாந்து அணிக் களமிறங்கியது. அந்த அணியின் தொடக்க வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினர். பர்ன்ஸ் 7, ராய் 8 என எடுத்து அவுட்டாகியதால், இங்கிலாந்து ரசிகர்கள் கடும் விரக்தி அடைந்தனர். இருப்பினும், அடுத்த வந்த மிடில் ஆர்டர் பேட்ஸ்மென்கள் சிறப்பாக விளையாடி அசத்தினர். ரூட் 77 ரன்களும், டென்லி 50 ரன்களும் எடுத்தனர். பேர்ஸ்ட்டோ 36 ரன்கள் சேர்த்தார். கடைசி வரை ஆட்டமிழக்காமல் பென் ஸ்டோக்ஸ் 135 ரன்கள் குவித்து இங்கிலாந்து அணியின் வெற்றிக்கு வித்திட்டார்.

இங்கிலாந்து அணி 125.4 ஓவரில் 9 விக்கெட் இழப்பிற்கு 362 ரன்கள் குவித்து, திகில் வெற்றிப் பெற்றது. கடைசியில் இரண்டு ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில், கடைசி விக்கெட்டினை வீழ்த்துவதில் ஆஸ்திரேலியா அணி கடும் முயற்சி செய்தது. இருப்பினும், இரண்டு வாய்ப்புகள் கிடைத்தும் தவறவிட்டதால், இங்கிலாந்து வெற்றி பெற்றது.

ஆஸ்திரேலியா அணியின் சார்பில், ஹாசல்வுட் 4 விக்கெட்டுகளையும், லயன் 2, பேட்டின்சன் மற்றும் கும்மின்ஸ் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டினை வீழ்த்தினர். ஐந்து போட்டிகள் கொண்ட தொடரில், மூன்று போட்டிகள் முடிவடைந்துள்ளன. அதில், ஆஸ்திரேலியா ஒன்றிலும், இங்கிலாந்து அணி ஒன்றிலும் வென்றுள்ளன. ஒரு போட்டி டிராவில் முடிவடைந்துள்ளது.

HOT NEWS