யூஜிசி விதிகள் பின்பற்றப்படவில்லை! அரியர் தேர்ச்சி விவகாரத்தில் நீதிமன்றத்தில் விவாதம்!

09 September 2020 அரசியல்
ugc.jpg

அரியர் மாணவர்கள் தேர்ச்சி பெற்றதாக, தமிழக அரசு அறிவித்ததில் யூஜிசியின் விதிமுறைகள் பின்பற்றப்படவில்லை என, நீதிமன்றத்தில் வாதம் நடைபெற்றது.

இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் பரவி வருகின்ற காரணத்தால், தமிழகம் உட்படப் பலப் பல்கலைக் கழகத் தேர்வுகள் நடைபெறாமல் உள்ளன. இதனை முன்னிட்டு, தமிழகத்தில் அரியர் தேர்விற்குப் பணம் கட்டியிருக்கின்ற மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. இதற்கு அண்ணா பல்கலைக் கழகத் துணைவேந்தர் மறுப்பு கருத்துத் தெரிவித்து இருந்தார்.

அகில இந்திய தொழில்நுட்ப கழகம் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து இருந்தது. மாணவர்கள் இவ்வாறு தேர்ச்சி பெற வைத்தால், வேலைவாய்ப்பு கிடைப்பதில் சிக்கல்கள் உண்டாகும் என்றுக் கூறியது. இது குறித்து, தூத்துக்குடி மாவட்டத்தினைச் சேர்ந்த ராம்குமார் என்பவர், பொதுநல வழக்குத் தொடர்ந்தார். அவர் இது குறித்து வாதிடுகையில், இறுதி ஆண்டுத் தேர்வினைத் தவிர, பிற தேர்வுகளை எழுத வேண்டிய மாணவர்களும், அரியர் மாணவர்களும் தேர்ச்சி பெற்றதாக தமிழக அரசு அறிவித்து உள்ளது. இது யூஜிசி விதிகளுக்கு எதிரானது.

அனைவரும் தேர்ச்சிப் பெற்றதாக அறிவிக்கும் அதிகாரம், உயர்கல்வித்துறைக்கு இல்லை. எனவே தமிழக அரசின் இந்த அறிவிப்பினை ரத்து செய்ய வேண்டும் என்றுத் தெரிவித்தார். இதே போல், முன்னாள் அண்ணா பல்கலைக் கழக துணைவேந்தரான பாலகுருசாமி தரப்பிலும், புதிய மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், 25 மதிப்பெண் எடுத்தவரையும், 25 அரியர்கள் வைத்திருப்பவர்களையும் தேர்ச்சி பெற வைத்திருப்பது ஏற்புடையது அல்ல. இதனால் மாணவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகும்.

இது தமிழக அரசின் உயர்கல்வித் துறையின் மதிப்பைக் குறைக்கும் செயலாகும். பல்கலக்கழகங்களின் மதிப்பு குறையும். எனவே, தமிழக அரசு வெளியிட்ட அரசாணையினை ரத்து செய்ய வேண்டும் என நீதிமன்றத்தில் கூறப்பட்டது. இதற்குப் பதிலளித்தி தமிழக அரசின் வழக்கறிஞர், தேசியப் பேரிடர் மேலாண்மை சட்டத்தினைப் பயன்படுத்தியே இந்த அரசாணை வெளியிட்டு உள்ளது. இதற்கு உச்சநீதிமன்றம் அனுமதியும் வழங்கி உள்ளது.

அரியர் மாணவர்கள் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்ட விவகாரத்தில், எவ்வித யூஜிசி விதிமுறையும் மீறப்படவில்லை என்றுக் கூறினார். இதனை விசாரித்த நீதிபதிகள் தமிழக அரசு மற்றும் யூஜிசி ஆகிய இரண்டையும் 2 வாரங்களில் பதிலளிக்குமாறு உத்தரவிட்டு உள்ளனர்.

HOT NEWS